×

பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கினார் அமரீந்தர்

புதுடெல்லி: பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் ‘பஞ்சாப் லோக் காங்கிரஸ்’ என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கியதாக அறிவித்துள்ளார். பஞ்சாப் மாநில முதல்வராக இருந்த அமரீந்தர் சிங், இம்மாநில காங்கிரஸ் தலைவர் நவஜோத் சிங் சித்துவுடன் ஏற்பட்ட மோதலால் தனது பதவியை ராஜினாமா செய்தார். பின்னர், ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவையும், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தோவாலையும் சந்தித்தார். இதனால், அவர் பாஜவில் சேரப்போவதாக கருத்து பரவியது. ஆனால், ‘நான் பாஜ.வில் இணையமாட்டேன். காங்கிரசிலும் நீடிக்க மாட்டேன்’ என்று அமரீந்தர் கூறினார்.

சில நாட்களுக்கு முன்பு புதிய கட்சி தொடங்கப் போவதாக அறிவித்தார். ஆனால், காங்கிரசில் இருந்து விலகாமல் இருந்தார். இந்நிலையில், தனது புதிய கட்சியின் பெயரை அமரீந்தர் நேற்று அறிவித்தார். அவரது புதிய கட்சிக்கு ‘பஞ்சாப் லோக் காங்கிரஸ்’ என்று தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளார். இதற்கான ஒப்புதல் தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் உள்ளது. கட்சியின் சின்னமும் பிறகு அறிவிக்கப்படும் என்று கூறியுள்ள அமரீந்தர் சிங், முன்னதாக காங்கிரசில் இருந்து விலகுவதற்கான காரணங்களை அடுக்கி, கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு 7 பக்க கடிதத்தை எழுதியுள்ளார்.

Tags : Amarinder ,Punjab Lok Congress , Amarinder started a new party called the Punjab Lok Congress
× RELATED மாஜி முதல்வரின் மனைவியான காங்கிரஸ்...