ஊத்துக்கோட்டையில் ரூ.9.25 லட்சத்தில் புதிய அங்கன்வாடி மையம்: டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ திறந்து வைத்தார்

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டையில் ரூ.9.25 லட்சத்தில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிடத்தை டி.ஜெ.கோவிந்தராஜன்  எம்எல்ஏ திறந்து வைத்தார். ஊத்துக்கோட்டை பேரூராட்சி அலுவலகம் எதிரில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளி கட்டி முடிக்கப்பட்டு 100 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இதன் வளாகத்தில் இருந்த  அங்கன்வாடி மைய கட்டிடம் மிகவும் பழுதடைந்து காணப்பட்டது. இதில், 30க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் படித்து வந்தனர். அபாயகரமாக இருந்த இந்த அங்கன்வாடி கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என தினகரன் நாளிதழில் தொடர்ந்து செய்தி வெளியானது.

இதையடுத்து, புதிய கட்டிடம் கட்ட ரூ.9.25 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. பின்னர், கட்டி முடிக்கப்பட்ட கட்டிடம் திறப்பு விழா நேற்று நடந்தது. இதில் மாவட்ட திட்ட அலுவலர் ராசாத்தி தலைமை தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர் மூர்த்தி, ஒன்றிய செயலாளர் சத்தியவேல்,  திமுக நகர செயலாளர் அப்துல் ரஷீத், பொதுக்குழு உறுப்பினர் அபிராமி குமரவேல், சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் சம்சுதீன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்கள் அப்துல் பரீத், தமிழ்செல்வம், பள்ளியின் தலைமையாசிரியர் கதிரவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் சிறப்பு அழைப்பாளராக கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் கலந்துகொண்டு ரூ.9.25 லட்சம் செலவில் கட்டப்பட்ட அங்கன்வாடி பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்து மாணவ, மாணவிகளுக்கு திருக்குறள் புத்தகங்கள், பேனா, பென்சில், பலகை ஆகியவைகளை வழங்கினார். முன்னதாக மாணவிகள் எம்எல்ஏவுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இந்நிகழ்ச்சியில் முன்னாள் நகர செயலாளர் குமரவேல், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் ஜீவா, டில்லிபாபு, ஜெயராமன் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories:

More