தீவிரவாத வழக்குகளை விசாரிக்க காஷ்மீரில் தனி புலனாய்வு பிரிவு: என்ஐஏ.வுக்கு பதிலாக அதிரடி

ஸ்ரீ நகர்: ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதம் தொடர்பான வழக்குகளை விசாரிக்கவும், கண்காணிக்கவும் தனி புலனாய்வு படை உருவாக்கப்பட்டு உள்ளது. இது, ஒன்றிய புலனாய்வு அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட உள்ளது.

ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேச உள்துறை பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: சிஐடி துறை இயக்குனரை தலைவராக கொண்டு, தனியாக மாநில புலனாய்வு அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் நடக்கும் அனைத்து விதமான தீவிரவாதம் தொடர்பான சம்பவங்கள் குறித்து வழக்கு பதிந்து, விசாரணை மேற்கொள்ளும் அதிகாரம் இந்த அமைப்புக்கு வழங்கப்பட்டுள்ளது.

தீவிரவாதத்துக்கு நிதியுதவி, திட்டங்கள், பொய் பிரசாரம், வெடிபொருட்கள் வைத்திருத்தல், தீவிரவாத சூழ்ச்சி, போதைபொருள் கடத்தல், கொலை, குண்டு வைத்தல் உள்பட உபா சட்டத்தின் கீழ் வரும் அனைத்து பிரிவுகளையும் இந்த அமைப்பு விசாரணை நடத்தும். மேலும், இந்த அமைப்பு தேசிய புலனாய்வு அமைப்புடன் ஒருங்கிணைந்து முக்கிய வழக்குகளை விரைந்து முடிக்கவும், குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரவும் உதவிகள் செய்யும். இனி, ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் மாநில புலனாய்வு அமைப்பு தனித்து இயங்கும்.

உடனுக்குடன் வழக்குகள் பதிவு செய்து உயரதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கும். 15 நாட்களுக்கு ஒருமுறை பதியப்பட்டுள்ள வழக்குகள், விசாரணை விவரம் உள்ளிட்டவற்றை காவல் துறை இயக்குனருக்கு சமர்ப்பிக்கும். இனிமேல், அதிக முக்கியத்துவம் வாய்ந்த வழக்காக இருந்தால் மட்டுமே, ஜம்மு காஷ்மீர் காவல் துறை இயக்குனர் பரிந்துரையின்படி தேசிய புலனாய்வு அமைப்பு அந்த வழக்கை விசாரிக்கம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதற்கு முன், ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதம் சம்பந்தப்பட்ட வழக்குகளை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) விசாரித்து வந்தது.

Related Stories: