×

தீபாவளி பண்டிகையை கொண்டாட 3 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்

* பஸ், ரயில்களில் கூட்டம் அலைமோதியது * சென்னையில் சிறப்பு ஏற்பாடுகள்

சென்னை: தீபாவளி பண்டிகை கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து இயக்கப்பட்ட அரசு பஸ், ரயில்களில் சுமார் 3 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச்சென்றனர். இதனால் பேருந்து நிலையம், ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது. முன்னதாக அரசு பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்து இருந்ததால் பொதுமக்கள் நிம்மதியான பயணம் மேற்கொண்டனர். தமிழகத்தில் நாளை தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி 4 நாட்கள் தொடர்ந்து விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. எனவே, சென்னையில் பணி, படிப்பு, தொழில், வணிகம் நிமித்தமாக தங்கியுள்ளவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்லும் வகையில், தினசரி இயக்கக் கூடிய 2,100 பேருந்துகளுடன், 3,506 சிறப்புப் பேருந்துகள் என மூன்று நாட்களுக்கும் சேர்த்து மொத்தமாக, சென்னையிலிருந்து 9,806 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து மேற்கண்ட மூன்று நாட்களுக்கு 6,734 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 16,540 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து இயக்கப்பட்ட அனைத்து பஸ்களிலும் கூட்டம் அதிகமாக இருந்தது.நேற்று மதிய நிலவரப்படி சென்னையில் இருந்து 1.50 லட்சம் பயணிகள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றனர். மேலும் 1,01,662 பயணிகள் பல்வேறு தேதிகளில் செல்ல ரிசர்வேஷன் செய்துள்ளனர். இதேபோல், ரயில் பயணத்தை விரும்புபவர்களின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்குவதாக தெற்கு ரயில்வே அறிவித்து இருந்தது.மேலும் முன்பதிவு இல்லாத பெட்டிகளைக் கொண்ட ரயில்களும் இயக்கப்பட்டன. இதிலும் ஆயிரக்கணக்கான மக்கள் சிரமம் இல்லாமல் பயணித்தனர். இதனால் எழும்பூர், சென்ட்ரல் ரயில்நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதேபோல் 1,400 ஆம்னி பேருந்துகள் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்டன. ஒட்டுமொத்தமாக அரசு பஸ், ரயில், ஆம்னி பஸ்களில் 3 லட்சத்துக்கும் மக்கள் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு புறப்பட்டுச் சென்றனர்.

மேலும் இன்று காலை முதல் இரவு வரை ஏராளமானோர் சொந்த வாகனங்களில் பயணம் செய்வார்கள் என்பதால் இன்று கூட்டம் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக அரசு சிறப்பு பஸ், கூடுதல் பேருந்துநிலையங்கள் போன்ற வசதிகளை செய்து இருந்ததால், பொதுமக்கள் நிம்மதியாக சொந்த ஊர்களுக்கு பயணித்து வருகின்றனர்.

கார்களில் படையெடுப்பு
கார், பைக்குகளிலும் ஏராளமானவர்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றனர். இதனால் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. முன்னதாக போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதை தவிர்த்து திருக்க ழுக்குன்றம்-செங்கல்பட்டு அல்லது பெரும்புதூர் - செங்கல்பட்டு வழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டு இருந்தது. அதன்படி கார் உள்ளிட்ட வாகனங்களில் சென்றவர்கள் சம்பந்தப்பட்ட வழித்தடத்தை பயன்படுத்தி பயணித்தனர்.

17,719 பேருந்துகள் இயக்கம்
தீபாவளி பண்டிகை முடிந்த பின்னர் 6 மற்றும் 7ம் தேதிகளில் சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் மீண்டும் சென்னைக்கு திரும்புவார்கள். எனவே இவர்களின் வசதிக்காக 5ம் தேதி முதல் 8ம் தேதி வரையில், தினசரி இயக்கக்  கூடிய 2,100 பேருந்துகளுடன், 4,319 சிறப்புப் பேருந்துகளும், ஏனைய பிற முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 5,000 சிறப்பு பேருந்துகள் என  மொத்தமாக 17,719 பேருந்துகளும் இயக்குவதாக போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.



Tags : Deepavali , Deepavali The festival 3 lakh people travel to their hometown to celebrate
× RELATED தீபாவளி ஸ்பெஷல் கிராமத்து மட்டன் வறுவல்!