வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவிப்பு: டிஎஸ்பி வீட்டில் அதிரடி ரெய்டு: திண்டுக்கல், தூத்துக்குடி வீடுகளில் சோதனை: ஏராளமான தங்க நகைகள், ஆவணங்கள் சிக்கின

திண்டுக்கல்: வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை குவித்ததாக எழுந்த புகார்களின் அடிப்படையில் தூத்துக்குடியில் பணியில் உள்ள டிஎஸ்பிக்கு சொந்தமான திண்டுக்கல் மற்றும் தூத்துக்குடியில் உள்ள வீடுகளில் லஞ்சஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். காலை 6.30 மணிக்கு துவங்கிய இந்த சோதனை மதியத்திற்கும் மேலும் நீடித்தது. இதில் திண்டுக்கல் வீட்டில் இருந்து ஏராளமான தங்க நகைகள் மற்றும் ஆவணங்கள் சிக்கியதாக தெரிகிறது. திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயராம்(51). தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவில் தற்போது டிஎஸ்பியாக பணிபுரிந்து வருகிறார். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளார் என இவர் மீது தொடர்ந்து புகார்கள் வந்தன.

இதையடுத்து தூத்துக்குடியில் டிஎஸ்பி ஜெயராம் தங்கியுள்ள வாடகை வீட்டிலும், திண்டுக்கல்லில் உள்ள அவரது சொகுசு பங்களாவிலும் இன்று காலை லஞ்சஒழிப்பு போலீசார் அதிரடியாக நுழைந்தனர்.  திண்டுக்கல்லில் உள்ள கோவிந்தாபுரம் அசோக் நகர் 2வது தெருவில் உள்ள இந்த சொகுசு பங்களாவில்  லஞ்சஒழிப்பு டிஎஸ்பி நாகராஜ், இன்ஸ்பெக்டர் ரூபா கீதா ராணி மற்றும் போலீசார் உள்ளிட்ட 10 பேர் கொண்ட குழுவினர் காலை 6.30 மணிக்கு சோதனையை துவக்கினர். வீட்டின் கதவுகளை மூடிய போலீசார், டிஎஸ்பி ஜெயராமின் மனைவி மற்றும் குடும்பத்தினரின் செல்போன்களை வாங்கி வைத்துக் கொண்டனர். மேலும் குடும்பத்தினர் யாரையும் வெளியே அனுமதிக்கவில்லை. இந்த சோதனையில் வீட்டில் பீரோக்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த  கணக்கில் வராத ஏராளமான தங்க நகைகள் சிக்கியதாக தெரிகிறது. மேலும் வருமானத்திற்கு அதிகமாக அவர் சேகரித்த சொத்துக்கள் தொடர்பான ஆவணங்களும் சிக்கியுள்ளன. திண்டுக்கல்லில் லஞ்சஒழிப்பு போலீசாரின் இந்த சோதனை மதியத்திற்கு மேலும் நீடித்தது.

இந்த ஆவணங்களின் அடிப்படையில் லஞ்சஒழிப்பு போலீசார், டிஎஸ்பி ஜெயராமின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர். மேலும் ஜெயராம் மீது, பொள்ளாச்சியில் பணி புரிந்த போது, பெண் போலீசார் ஒருவரிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக ஒரு வழக்குப்பதிவாகியுள்ளதும், அதில் துறை ரீதியான விசாரணை நடந்து வருகிறது என்பது தெரியவந்துள்ளது. இந்த புகாரின் அடிப்படையில்தான் பொள்ளாச்சியில் இருந்து, தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் தூத்துக்குடியில் பணியில் சேர்ந்த பின்னர், அவர் பெரும்பாலும் மருத்துவ விடுப்பிலேயே உள்ளார் என்று கூறப்படுகிறது.

Related Stories: