×

வாழ்க்கையில் மறக்க முடியாத போட்டி: கோப்ஃபெர் பேட்டி

பாரிஸ்: பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் முதல் சுற்றில் ஜெர்மனியின் முன்னணி டென்னிஸ் நட்சத்திரம் டொமினிக் கோப்ஃபெர், கடும் போராட்டத்திற்கு பின்னர் முன்னாள் நம்பர் 1 வீரரான ஆண்டி முர்ரேவை வீழ்த்தினார். போட்டி முடிந்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம்  ‘வாழ்க்கையில் மறக்க முடியாத போட்டி இது’ என்று மகிழ்ச்சியுடன் கூறினார். இப்போட்டியில் கோப்ஃபெர் முதல் செட்டை 6-4 என எளிதாக கைப்பற்றினார். 2வது செட்டிலும் அவரது கையே ஓங்கியிருந்தது. 5-4 என முன்னிலையில் இருந்தார். ஒரு கேமை எடுத்தால் வெற்றி பெற்று விடலாம் என்ற வலுவான நிலையில் இருந்தார். ஆனால் ஆண்டி முர்ரே தனது அனுபவத்தை பயன்படுத்தி, நிதானமாக பந்துகளை பிளேஸ் செய்து,  மிகச் சரியாக கோப்ஃபெரின் கேமை, பிரேக் செய்தார் . இதனால் இருவரும் 5-5 என்ற நிலையை அடைந்தனர்.

பின்னர் அடுத்தடுத்து 2 கேம்களை எடுத்து 2வது செட்டை 7-5 என கைப்பற்றி கோப்ஃபெருக்கு, முர்ரே அதிர்ச்சியளித்தார். 3வது செட்டில் இருவரது ஆட்டத்திலும் அனல் பறந்தது. அதனால் டை பிரேக்கர் வரை அந்த செட் நீடித்தது. டை பிரேக்கரில் முர்ரேவுக்கு 7 மேட்ச் பாயின்ட்டுகள் கிடைத்தன. அனைத்திலும் கோப்ஃபெர் தப்பிப் பிழைத்தார். கடைசியில் துல்லியமான சர்வீஸ்கள் மூலம் 7-6 என 3வது செட்டை கைப்பற்றி, ஒரு வழியாக முர்ரேவை வீழ்த்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் கோப்ஃபெர் கூறுகையில், ‘‘2வது செட்டில் போட்டி முடிந்து விடும். நான் வெற்றி பெற்று விடுவேன் என நம்பினேன். ஆனால் திடீரென ஆட்டத்தின் போக்கையே தலை கீழாக மாற்றி விட்டார் முர்ரே. அதன் பின்னர் போட்டி எனது கையில் இல்லை.

3வது செட்டில் 7 மேட்ச் பாயின்ட்டுகள் அவருக்கு கிடைத்தன. ஒவ்வொரு பந்தையும் கவனித்து, கவனித்து பிளேஸ் செய்து, அனைத்து மேட்ச் பாயின்ட்டுகளில் இருந்தும் தப்பி பிழைத்தேன். அப்புறம் எனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி, ஒரு வழியாக வென்று விட்டேன். இன்னும் என்னால் நம்ப முடியவில்லை. இது எனது வாழ்க்கையில் மறக்க முடியாத போட்டி’ என்று மகிழ்ச்சி தெரிவித்தார். ஆண்டி முர்ரே கூறுகையில், ‘‘7 மேட்ச் பாயின்ட்டுகளில் ஒன்றைக் கூட என்னால் வெற்றிக்குரியதாக மாற்ற முடியவில்லை. எனது ஆட்டம் எனக்கே ஏமாற்றமளிக்கிறது’’ என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.

Tags : Gobffer , Paris Masters Tennis
× RELATED எஞ்சிய போட்டிகளில் மயங்க் யாதவ்...