வெற்றி, தோல்வி என்பது விளையாட்டில் சகஜம்: கோஹ்லியின் குடும்பத்தினரை விமர்சிப்பதா?: இன்சமாம் உல் ஹக் கண்டனம்

ஷார்ஜா: அமீரகத்தில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பையில் இந்தியா தனது முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. தொடர்ந்து நேற்று முன்தினம் நடைபெற்றப் போட்டியில் நியூசிலாந்திடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. கேப்டன் கோஹ்லியின் செயல்பாடுகளால்தான் இந்த தோல்வி என்று விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இதில் சிலர் விராட் கோஹ்லியின் குழந்தை மற்றும் குடும்பத்தினரையும் மிரட்டும் விதமாக பேசி வருகின்றனர். இதற்கு பாகிஸ்தான் அணியின் மாஜி கேப்டன் இன்சமாம் உல் ஹக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:- ‘‘கோஹ்லி மகள் மீது மிரட்டல் விடுக்கப்படுவதாக செய்திகள் வந்ததை அறிந்தேன். கிரிக்கெட் என்பது விளையாட்டு என்பதை மக்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்.

நாங்கள் ஒவ்வொருவரும் எங்களது நாடுகளுக்கு விளையாடுகிறோமே தவிர, நாங்கள் அனைவரும் கிரிக்கெட் வீரர்கள். கோஹ்லியின் பேட்டிங், அவரது கேப்டன்சியை விமர்சனம் செய்யலாம். ஆனால் யாருக்கும் அவரின் தனிப்பட்ட குடும்பத்தை தாக்கி பேசுவதும், மிரட்டுவதும் தவறான விஷயம். கோஹ்லியின் குடும்பத்தை அவதூறாக பேசுவது என் மனதை மிகவும் பாதித்துள்ளது. இதை வன்மையாக கண்டிக்கிறேன். சில நாட்களுக்கு முன்பு இதேபோல் முகமது ஷமியையும் சமூக வலைத்தளங்களில் கடுமையாக தாக்கினர். அதுவும் தவறு. வெற்றி, தோல்வி என்பது விளையாட்டில் சகஜம். பாகிஸ்தான் அணிக்கு எதிரான தோல்விக்கு பின்பு நியூசிலாந்து அணியுடனான போட்டி மிகவும் முக்கியமானது. ஆனால் அந்த போட்டியில் இந்தியா இவ்வளவு மோசமாக விளையாடும் என நான் எதிர்பார்க்கவே இல்லை. ஒட்டுமொத்த அணியினரும் கடும் அழுத்தத்தை உணர்வதாக நினைக்கிறேன். இப்படியொரு இந்திய அணியை நான் பார்த்ததே இல்லை” என்றார்.

Related Stories:

More