தாத்தா இறந்து விட்டதாக கூறி ரயிலில் கடத்தப்பட்ட குமரி ஆசிரியரின் மனைவி உ.பி.யில் மீட்பு: காதல் திருமணத்தை பிரிக்க உறவினர்கள் நாடகமாடியது அம்பலம்

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த இளம் பெண்ணுடன் காதல் ஏற்பட்டது. காதலர்கள் 2 பேரும் திருமணம் செய்ய முடிவு செய்து கடந்த ஜூலை மாதம் 23ம் தேதி கன்னியாகுமரி வந்தனர். காதலன் குடும்பத்தினர் முன்னிலையில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். பின்னர் புதுமண தம்பதிகளாக தங்களது திருமண வாழ்க்கையை தொடங்கினர். திருமணத்துக்கு பின் இளம் பெண், பஞ்சாப்பில் உள்ள தனது குடும்பத்தினருடன் அடிக்கடி செல்போனில் மட்டும் பேசி வந்தார். கடந்த வாரம் பஞ்சாபில் இருந்து வந்த இளம் பெண்ணின் உறவினர்கள் மகள், மருமகனை ஏற்றுக் கொள்வதாகவும், திருமணத்துக்காக தாங்கள் செய்ய வேண்டிய சீர்வரிசைகளை விரைவில் செய்ய உள்ளோம் என்றும் தெரிவித்தனர்.

பின்னர் இளம்பெண்ணின், தாத்தா ஒருவர் காலமாகி விட்டதாகவும், அவருக்கு இறுதி சடங்கு செய்ய வேண்டும். எனவே எங்கள் வீட்டு பெண்ணை அழைத்து செல்கிறோம். 10 நாளில் திரும்ப அழைத்து வந்து விடுவோம் என்றனர். ஆசிரியரும் சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து, கணவர் குடும்பத்தினர் சம்மதத்துடன் அந்த இளம்பெண் ரயிலில், பஞ்சாப் புறப்பட்டார். டெல்லி சென்று அங்கிருந்து பஞ்சாப் செல்வது என பயண திட்டம் இருந்தது. ஆனால் ரயிலில் சென்று கொண்டிருந்த போது, உறவினர்களின் நடவடிக்கைகள் மாறின. அப்போது தான் தன்னை, கணவரிடம் இருந்து பிரிப்பதற்காக குடும்பத்தினர் நடத்திய நாடகம் என்பது இளம்பெண்ணுக்கு தெரிய வந்தது. உடனடியாக அவர் தனது மொபைல் போன் மூலம் உறவினர்களுக்கு தெரியாமல், கணவரிடம் பேசி எப்படியாவது தன்னை காப்பாற்ற வேண்டும். ஊருக்கு சென்றால் நான் திரும்பி வர முடியாது. என்னை கொலை கூட செய்து விடுவார்கள். எனவே காப்பாற்றுங்கள் என கூறினார். மனைவி கூறிய தகவல்களை கேட்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியர், சுதாரித்துக் ெகாண்டு இது குறித்து குமரி மாவட்ட காவல் அதிகாரிகள் உதவியை நாடினார். அவரின் உண்மையான பாசம் மற்றும் பதற்றத்தை உணர்ந்த போலீசார், அவருக்கு ஆறுதல் கூறியதுடன் இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து இளம்பெண்ணை காப்பாற்றுவதற்கான நடவடிக்கையில் இறங்கினர்.

முதற்கட்டமாக சைபர் க்ரைம் போலீஸ் உதவியுடன், இளம்பெண் செல்போன் நம்பர் மூலம் ரயில் எங்கு பயணிக்கிறது என்பதை கண்காணித்தனர். அப்போது ரயில் டெல்லி நோக்கி சென்று கொண்டிருப்பது தெரிய வந்தது. உடனடியாக உ.பி., டெல்லி ரயில்வே போலீசாருக்கு தகவல் ெகாடுத்தனர். இதையடுத்து இரு மாநில ரயில்வே போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். ஆசிரியரும், திருவனந்தபுரத்தில் இருந்து விமானத்தில் டெல்லி சென்று பஞ்சாப், டெல்லியில் உள்ள தனது நண்பர்களுடன் சேர்ந்து மனைவியின் வருகைக்காக காத்திருந்தார். இந்த நடவடிக்கைகள் எல்லாவற்றையும் அவ்வப்போது போன் மூலம் ஆசிரியர், தனது மனைவிக்கு தெரிவித்து வந்தார். ஆனால் ரயிலில் இருந்த அவர், எதையும் வெளிகாட்டிக் கொள்ளாமல் உறவினர்களுடன் சகஜமாக இருந்தார்.

உ.பி. ரயில் நிலையத்தில் இறங்க முடிவு செய்தனர். இது குறித்து உடனடியாக கணவருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து உ.பி. ரயில் நிலைய போலீசார் உஷார்படுத்தப்பட்டு, ரயில் நிலையத்தில் இளம்பெண் மற்றும் குடும்பத்தினர் இறங்கியதும், அங்கிருந்த ரயில்வே போலீசார் அவர்களை மடக்கினர். பின்னர் இளம்பெண்ணிடம் விசாரணை நடத்திய போது, கணவரிடம் இருந்து தன்னை பிரித்து உறவினர்கள் ஏமாற்றி கடத்தி வருவதாக கூறினார். இதையடுத்து ரயில் நிலைய போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது இளம்பெண், கணவருடன் தான் செல்வேன் என்றார்.

இதையடுத்து ரயில் நிலையத்தில் நண்பர்களுடன் தயார் நிலையில் இருந்த ஆசிரியரிடம், அவரது மனைவியை போலீசார் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசாருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டு அங்கிருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்தவர்கள், நேற்று மாலை குருந்தன்கோடு வந்தனர். தனது காதல் மனைவியை மீட்க உதவி புரிந்த போலீஸ் அதிகாரிகளை சந்தித்து ஆசிரியர் நன்றி தெரிவித்தார். அவருடன் வந்த மனைவி, போலீசாருக்கு கைகூப்பி, கண்ணீர் மல்க நன்றி கூறினார்.

Related Stories: