×

மந்தகதியில் மழைநீர் வடிகால் திட்ட பணிகள்!: பூந்தமல்லி- ஆவடி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்... அணிவகுக்கும் வாகனங்களால் பொதுமக்கள் அவதி..!!

சென்னை: சென்னையின் புறநகர் பகுதியான பூந்தமல்லி- ஆவடி சாலையில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கிறது. பூந்தமல்லி- ஆவடியை இணைக்கக்கூடியது புதிய ராணுவ சாலை. மாநில நெடுஞ்சாலை துறை சார்பில் 49 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு இந்த சாலையில் மழைநீர் வடிகால் பணிகள் கடந்த 8 மாதங்களாக நடைபெற்று வருகின்றது. மந்தகதியில் நடைபெற்று வரும் இந்த பணியின் காரணமாக சாலையில் பள்ளங்கள் உள்ளதால் அவ்வப்போது விபத்துகள் ஏற்படுவதோடு, கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.

இந்த சாலையில் கடந்த வாரம் முதியவர் ஒருவர் கால் தவறி மழைநீர் கால்வாயில் விழுந்து நூலிழையில் உயிர் தப்பினார். தற்போது இந்த சாலையில் கடந்த 2 மணி நேரமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. 2 கி.மீ. தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால், அவசர ஊர்திகள் விரைந்து செல்ல சிரமம் ஏற்பட்டிருக்கிறது. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த இப்பகுதியில் போக்குவரத்து காவலர்கள் ஒருவர் கூட பணியில் ஈடுபடவில்லை எனவும் சாலையை கடக்க மணிக்கணக்கில் ஆவதாகவும் வாகன ஓட்டிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

இந்த மழைநீர் வடிகால் பணியானது அடுத்த 2 மாதத்திற்குள் நிறைவுபெறும் என நெடுஞ்சாலை துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தீபாவளி நெருங்குவதால் பொருட்களை வாங்க பொதுமக்கள் அதிகளவில் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். எனவே உடனடியாக பொதுப்பணித்துறை அதிகாரிகள், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தலையிட்டு இப்பணியை விரைவுபடுத்த வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.


Tags : Poonamallee-Avadi road , Rainwater drainage, Poonamallee-Avadi road, traffic congestion
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...