×

படை வலிமையை காட்ட கிழக்கு லடாக்கில் வான்வழி பயிற்சி மேற்கொண்டு வரும் இந்திய ராணுவம்...மிரளும் சீனா..!!

லடாக்: இந்திய ராணுவம் கிழக்கு லடாக்கில் வான்வழி பயிற்சி மேற்கொண்டு வரும் காட்சிகள் வெளியாகியுள்ளன. இந்திய - சீன படைகள் கடந்த ஆண்டு லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் மோதலில் ஈடுபட்டனர். இதில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பிலும் பல வீரர்கள் இறந்தனர். இதனால் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து அமைதியை ஏற்படுத்தும் வகையில் இரு நாடுகளும் பலகட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும் இதுவரை பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்படவில்லை.

இந்த நிலையில், இந்திய ராணுவம் கிழக்கு லடாக்கில் வான்வழி பயிற்சி மேற்கொண்டு வருகிறது. 14 ஆயிரம் அடி உயரத்தில், மைனஸ் 20 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் 3 நாட்கள் இந்த பயிற்சிகள் நடக்க உள்ளன. இந்த ஒத்திகையில் நூற்றுக்கணக்கான வீரர்கள் பங்கேற்றுள்ளனர். பாராட்ரூப்பர்ஸ் எனப்படும் விமானத்திலிருந்து குதிக்கும் பாராசூட் வீரர்கள், எதிரிகளின் இலக்குகளை தாக்குவது போல் பயிற்சி எடுத்து கொண்டனர்.

இந்த ஒத்திகையில் சி 130 ஜே சூப்பர் மற்றும் ஏ.என். 32 ரக விமானங்கள் பங்கேற்றன. தொடர்ந்து, எல்லை பகுதிகளில் இந்திய ராணுவம் தனது படை வலிமையை அவ்வப்போது சீனாவுக்கு தெரியப்படுத்தி வருகிறது. எல்லை பகுதிகளில் இதுபோன்ற பயிற்சிகள் கடந்த காலங்களில் நடத்தப்பட்டதாகவும், தற்போது பயிற்சி நடவடிக்கைகளை மேலும் அதிகப்படுத்தி இருப்பதாகவும் ராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Indian Army ,East Ladak ,China , Force strength, East Ladakh, aerial training, Indian Army
× RELATED உலகின் உயரமான போர்க்களம் சியாச்சின்...