ஏழை மக்களை பற்றி ஒருபோதும் அக்கறை இல்லை; பா.ஜ.க தலைவர்களின் வருமானம் மட்டுமே உயருகிறது...கபில் சிபில் குற்றச்சாட்டு..!!

டெல்லி: ஏழை மக்களை பற்றி பாஜகவுக்கு ஒருபோதும் கவலை இல்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபில் குற்றம்சாட்டியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர், மத்தியப்பிரதேச பா.ஜ.க. அமைச்சர் மகேந்திர சிங் சிசோடியா கூறுகையில், சாமானியர்களின் வருமானம் அதிகரிக்கவில்லையா? அரசால் அனைத்தையும் இலவசமாக வழங்க முடியாது. அரசின் மொத்த வருவாயும் எரிபொருளிலிருந்து வருகிறது. எண்ணெய் வருவாய் மூலம் அனைத்து திட்டங்களுக்கும் நிதி வழங்கப்படுகிறது. வருமானம் உயர்ந்தால், பணவீக்கத்தையும் ஏற்க வேண்டும் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

இதற்கு பல்வேறு தரப்பினரும் விமர்சனம் செய்தனர். இந்நிலையில், ஏழை மக்களை பற்றி ஒருபோதும் அக்கறை இல்லை. பா.ஜ.க தலைவர்களின் வருமானம் மட்டுமே உயருகிறது என்று கபில் சிபில் கடுமையாக சாடியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜக தலைவர்கள் எதார்த்த உலகில் இல்லை என்றும் அதனால் தான் ஏழைகளின் வருமானம் உயர்ந்திருப்பதாக கூறி வருவதாகவும் சுட்டிக்காட்டினார். ஒரு மாதத்திற்கு 6 ஆயிரம் ரூபாய் சம்பாதித்த ஒருவர் தற்போது மாதம் 25 ஆயிரம் ரூபாய் சம்பாதிப்பதாக பாஜக தலைவர் ஒருவர் கூறுகிறார்.

ஆனால் உண்மையில் பாஜக தலைவர்களின் வருமானம் மட்டுமே உயர்ந்திருக்கிறது. பொதுமக்களின் வருமானம் உயரவில்லை என்றும் கபில் சிபில் தெரிவித்தார். சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருவதாக குறிப்பிட்ட கபில் சிபில், ஆனால் அதை பொருட்படுத்தாமல் பாஜக மத அரசியல் செய்து வருவதாக குறிப்பிட்டார். மேலும், இந்த அரசை மக்கள் தூக்கி எறிவார்கள் என்ற நம்பிக்கை தமக்கு உள்ளது. வர உள்ள உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தலில் இருந்து இது துவங்கும் என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபில் கூறினார்.

Related Stories: