×

மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில் பெண் காவலர் பலி என்ற துயர செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன் :எடப்பாடி பழனிசாமி

சென்னை: காவலர் கவிதா மறைவுக்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.சென்னை தலைமைச் செயலக முதலமைச்சர் தனிப்பிரிவு கட்டிடத்தின் அருகில் உள்ள பழமை வாய்ந்த பெரிய மரம் மழையின் காரணமாக வேரோடு சாய்ந்து விழுந்தது. அப்போது, அங்கே காவல் பணியிலிருந்த முத்தயால்பேட்டை போக்குவரத்து காவல்நிலைய தலைமைக் காவலர் கவிதா அவர்கள் மரத்தினடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.மரம் சாய்ந்து விழுந்ததில் ராயபுரம் போக்குவரத்து தலைமை காவலர் முருகன் என்பவர் லேசான காயங்களுடன் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

அரக்கோணத்தை சேர்ந்த கவிதா தண்டையார்பேட்டை காவல் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். விபத்தில் பலியாகியுள்ள  கவிதாவுக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் காவலர் கவிதா மறைவுக்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், இன்று காலை, சென்னை, தலைமை செயலகத்தில் பெரியமரம் ஒன்று வேரோடு சாய்ந்ததில் பணியில் இருந்த பெண் காவலர் திரு.கவிதா மரணமடைந்தார் என்ற துயர செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.


Tags : Edibati Palanisami , முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி
× RELATED அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்...