×

மெஞ்ஞானபுரம் அருகே அரசு பஸ் மணலில் சிக்கி கவிழ்ந்தது: 10 பயணிகள் படுகாயம்

உடன்குடி: நெல்லையில் இருந்து உடன்குடிக்கு புறப்பட்ட அரசு பஸ், மெஞ்ஞானபுரம் அருகே சாலையோர மணலில் சிக்கி கவிழ்ந்தது. இதில் ஆசிரியைகள் உள்ளிட்ட 10 பேர் படுகாயமடைந்தனர்.
 நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து உடன்குடிக்கு நேற்று காலை புறப்பட்ட அரசு பஸ்சை டிரைவர் மணிகண்டன் ஓட்டிச்சென்றார். ராமசுப்பு நடத்துநராக பணியில் இருந்தார். இதில் உடன்குடி, மெஞ்ஞானபுரம் பகுதி பள்ளி ஆசிரியைகள் உள்ளிட்ட சுமார் 40 பேர் பயணித்தனர். காலை 8 மணி அளவில் மெஞ்ஞானபுரம் அருகே எழுவரைமுக்கி பகுதியில் சென்ற போது எதிரே வந்த பள்ளி வாகனத்திற்கு வழிவிட அரசு பஸ் டிரைவர் முயன்றார்.

அப்போது திடீரென அவரது கட்டுப்பாட்டை இழந்த பஸ் திடீரென சாலையோர மணலில் சிக்கி கவிழ்ந்தது. இதில் பஸ்சில் இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கியதால் அலறினர். இதனிடையே விபத்து காரணமாக பஸ்சில் இருந்து டீசலும் வெளியேறியது. இதனால் அச்சமடைந்த பயணிகள், பஸ்சின் முன் பக்க கண்ணாடியை உடைத்து விட்டு வெளியேறினர். இந்த விபத்தில் பள்ளி ஆசிரியைகள் மற்றும் பயணிகள் உள்ளிட்ட 10 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த மெஞ்ஞானபுரம் போலீசார் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு அருகேயுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். நீண்ட காலத்திற்கு பிறகு பள்ளிகள் நேற்று திறக்கப்பட்ட நிலையில் பணிக்கு சென்ற ஆசிரியைகள் பயணித்த அரசு பஸ் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : Menjanpuram , A government bus overturned in the sand near Menjanpuram, injuring 10 passengers
× RELATED மெஞ்ஞானபுரத்தில் பேவர்பிளாக் சாலை...