பெரணமல்லூரில் அவலம்; அரசு பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கி நிற்பதால் மாணவிகள் அவதி: அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பெரணமல்லூர்: பெரணமல்லூர் அரசு பெண்கள் பள்ளி வளாகத்தில் மழைநிர் தேங்கி நிற்பதால் மாணவிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வளாகத்தில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற மாணவிகள், பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர். பெரணமல்லூர் காவல் நிலையம் அருகே அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். பள்ளி வளாகத்தில் தேங்கும் மழைநீரை வெளியேற்ற உரிய கட்டமைப்பு வசதி இல்லை.

இதனால், பள்ளி வளாகத்தில் மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி மாணவிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இந்நிலையில் பெரணமல்லூரில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பள்ளி வளாகத்தில் உள்ள சைக்கிள் ஸ்டாண்ட் பகுதி, இறை வணக்கம் நடத்தும் இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் பள்ளிக்கு வரும் மாணவிகள் சைக்கிள் விடுவதில் சிரமப்படுகின்றனர். மேலும் இறைவணக்கம் செலுத்த செல்லும்போது மாணவிகள் தண்ணீரில் நடந்து செல்லும் நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக தண்ணீர் தேங்கும் இடம் சிமெண்ட் தரையாக இருப்பதால்  பாசி படிந்துவிடுவதால் மாணவிகள் அவசரமாக செல்லும்போது வழுக்கி விழுந்து காயமடைகின்றனர்.

அதுமட்டுமின்றி தேங்கியுள்ள மழைநீரில் கொசுக்கள் உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால், வகுப்பில் மாணவிகள் கொசுத்தொல்ைலயாலும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மழைநீர் வளாகத்தில் தேங்காமல் இருக்க வழி வகை செய்ய வேண்டும் என்று மாணவிகள், அவர்களது பெற்றோர் ேகாரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

More