×

தீபத்திருவிழா கட்டுப்பாடுகளுடன் நடைபெறும் அண்ணாமலையார் கோயிலில் மகா தீபத்தன்று பக்தர்களுக்கு அனுமதியில்லை

* தேரோட்டம், சுவாமி மாட வீதி உலா ரத்து   
* கலெக்டர் அறிவிப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபத்தன்று பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், தேரோட்டமும், சுவாமி மாட வீதி உலாவும் நடைபெறாது என கலெக்டர் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா வரும் 10ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழாவின் நிறைவாக, 19ம் தேதி அதிகாலை கோயிலில் பரணி தீபமும், அன்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரமுள்ள மலை மீது மகா தீபமும் ஏற்றப்படும்.

இந்நிலையில், தீபத்திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று மாலை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பா.முருகேஷ் தலைமையில் நடந்தது. அதில், கூடுதல் கலெக்டர் மு.பிரதாப், கோயில் இணை ஆணையர் கே.பி.அசோக்குமார், மாவட்ட வன அலுவலர் அருண்லால், நகராட்சி ஆணையர் பார்த்தசாரதி உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். அப்போது, கொரோனா தொற்று பரவல் இன்னும் முற்றிலுமாக குறையாத நிலையில், கடந்த ஆண்டு தீபத்திருவிழா நடந்ததை போல, இந்த ஆண்டும் அரசின் வழிகாட்டுதல் நடைமுறையை பின்பற்றி விழாவை நடத்துவது குறித்து துறை வாரியாக கலெக்டர் ஆய்வு நடத்தினார்.

அப்போது, கலெக்டர் பா.முருகேஷ் கூறியதாவது: ஆன்மிக பக்தர்களின் உணர்வுகள் பாதிக்காதபடியும், ஊரடங்கு கட்டுப்பாடுகளை பின்பற்றியும் கார்த்திகை தீபத்திருவிழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தீபத்திருவிழாவை முன்னிட்டு, வரும் 7ம் தேதி முதல் 17ம் தேதி வரையிலும், 20ம் தேதி முதல் 23ம் தேதி வரையிலும் தினமும் 10 ஆயிரம் பக்தர்கள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். அதையொட்டி, திருக்கோயில் இணையதளத்தில் கட்டணமில்லா முன்பதிவு செய்து இ-பாஸ் பெறும் வசதி ஏற்படுத்தப்படும்.

இந்த இணையதளம் வரும் 6ம் தேதி முதல் செயல்படும். ஆதார் எண், முகவரி, தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கான ஆதாரம் ஆகியவற்றை பதிவேற்றி, இ-பாஸ் பெறலாம். திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு 30 சதவீதமும், வெளி மாவட்டத்தினருக்கு 70 சதவீதமும் இ-பாஸ் வழங்கப்படும். வரும் 18ம் தேதியும், பரணி தீபம் மற்றும் மகா தீபம் ஏற்றப்படும் 19ம் தேதியும், அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதியில்லை. சுவாமி பல்லக்கு தூக்குவோர், கோயில் பணியாளர்கள், சிவாச்சாரியார்கள் ஆகியோருக்கு அடையாள அட்டை வழங்கி, கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

விழா நிகழ்வுகள் முழுவதும் கோயில் இணையதளம் மற்றும் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு மூலம் விழாவை பக்தர்கள் தரிசனம் செய்யலாம். மேலும், வழக்கமான ஆன்மிக மரபுபடி மலைமீது மகா தீபம் ஏற்றப்படும். ஆனால், பக்தர்கள் மலைக்கு செல்ல அனுமதியில்லை. அதேபோல், மாட வீதியில் தினமும் நடைபெறும் சுவாமி வீதி உலா, வெள்ளித் தேரோட்டம், தேர் திருவிழா இந்த ஆண்டும் நடைபெறாது. அதற்கு மாற்றாக, திருக்கோயில் 5ம் பிரகாரத்தில் சுவாமி வீதி உலா நடைபெறும். மேலும், மகா தீபத்தன்றும், பவுர்ணமியன்றும் கிரிவலம் செல்லவும் தடை விதிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : Annamalaiyar Temple ,Great Fire , Devotees are not allowed in the Annamalaiyar Temple on the day of the Great Fire, which is held with fire festival restrictions
× RELATED சித்திரை வசந்த உற்சவ விழா நிறைவு...