×

போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மதுரை, புதுகை, தஞ்சை மார்க்கத்திற்கு திருச்சி மாநகரில் 3 இடங்களில் தற்காலிக பஸ் நிலையம் திறப்பு: 7ம் தேதி வரை செயல்படும்

திருச்சி: திருச்சி மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மதுரை, புதுகை, தஞ்சை மார்க்கத்திற்கு 3 இடங்களில் தற்காலிக பஸ் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இது வரும் 7ம் தேதி வரை செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருச்சியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளின் நலனுக்காகவும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும் திருச்சி மாநகரில் தஞ்சை மார்க்கம், புதுக்கோட்டை மார்க்கம் மற்றும் மதுரை மார்க்கம் ஆகிய வழித்தடங்கில் செல்லும் பஸ்களுக்காக தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி இந்த பஸ் நிலையங்கள் நேற்று 1ம் தேதி முதல் 7ம் தேதி வரை இயக்கப்படுகிறது. மன்னார்புரத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பஸ் நிலையத்தை அரசு போக்குவரத்துக்கழக பொது மேலாளர் சக்திவேல், கன்டோன்மென்ட் போலீஸ் துணை கமிஷனர்கள் முருகேசன், அஜய்தங்கம் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் நேற்று மன்னார்புரம் தற்காலிக பஸ் நிலையத்தை பார்வையிட்டு காவல் அதிகாரிகளுக்கு உரிய அறிவுரை வழங்கினார்.

தஞ்சை மார்க்கம் பஸ்களுக்கு சோனா, மீனா தியேட்டர் எதிரில் உள்ள தற்காலிக பஸ் நிலையத்திலிருந்தும், புதுக்கோட்டை மார்க்க பஸ்களுக்கு பழைய ஹவுசிங் யூனிட் இலுப்பூர் சாலையிலும், மதுரை மார்க்கம் பஸ்களுக்கு மன்னார்புரம் சர்வீஸ் சாலையில் உள்ள தற்காலிக பஸ் நிலையத்திலிருந்து பஸ்கள் இயக்கப்படவுள்ளது. தென் மாவட்டங்கள் மற்றும் புதுக்கோட்டை மார்க்கத்திலிருந்து திருச்சி மாநகர் வழியாக சென்னை செல்லும் அரசு பஸ்கள் மன்னார்புரம் வந்து பயணிகளை இறக்கி / ஏற்றி மன்னார்புரத்திலிருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்னை செல்லும்.

மற்ற ஊர்களுக்கு செல்லும் பஸ்களின் வழித்தடங்களில் எந்தவித மாற்றமுமின்றி வழக்கம்போல மத்திய பஸ் நிலையத்திலிருந்து புறப்படும். மத்திய பஸ் நிலையத்திலிருந்து மன்னார்புரம் தற்காலிக பஸ் நிலையத்திற்கு சுற்று பஸ்கள் இயக்கவும் அரசு போக்குவரத்து கழகம் மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேற்படி தற்காலிக பஸ் நிலையங்களில் காவல்துறையினர் பாதுகாப்பும், மாநகராட்சி மூலம் மின்விளக்கு, நிழற்குடை, குடிநீர், பொதுக் கழிப்பிடவசதி, ஒலிபெருக்கி மூலம் தகவல்களை தெரிவித்தல் போன்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என திருச்சி மாநகர கமிஷனர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

மேலும், திருச்சி மாநகரில் தீபாவளியையொட்டி போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக பல்வேறு வழிறைகளை கடைபிடிக்க தேசிய நெடுஞ்சாலையில் எக்காரணத்தை கொண்டும் எவ்வித வாகனங்களையும் நிறுத்தக்கூடாது. பஸ்களை அதற்கென ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிறுத்தத்தில் மட்டுமே நிறுத்தி பயணிகளை இறக்கி, ஏற்ற வேண்டும். வேன், கார் மற்றும் ஆட்டோக்களை அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில்தான் நிறுத்த வேண்டும். வியாபாரிகள் மற்றும் தரைக்கடை வியாபாரிகள் சாலையை ஆக்கிரமித்து கடைகளை அமைத்து விற்பனை செய்யக் கூடாது எனவும் மாநகர கமிஷனர் கார்த்திகேயன் தெரிவித்தார்.

கமிஷனர் எச்சரிக்கை: மேலும் கமிஷனர் கூறுகையில், பட்டாசு வியாபாரம் செய்பவர்கள் அனுமதி பெற்ற இடத்தில் மட்டும்தான் விற்பனை செய்ய வேண்டும். தரைக்கடை மற்றும் தள்ளுவண்டியில் வைத்து பட்டாசுகளை விற்பனை செய்யக்கூடாது. மேற்படி விதிகளை மீறுவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இது பற்றிய புகாருக்கு காவல் கட்டுப்பாட்டு அறை எண் 100க்கும் மற்றும் மாநகர காவல் ஆணையர் வாட்ஸ்அப் எண் 96262 73399க்கும் தெரிவிக்கலாம் என்றார்.

Tags : Trichy ,Madurai ,Pudukai ,Tanjore , Temporary bus stands at 3 locations in Trichy for Madurai, Pudukai and Tanjore routes to avoid traffic congestion: Operation till 7th
× RELATED திருப்பூரில் இருந்து தேர்தலில்...