×

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு சென்னையில் 40.54 லட்சம் வாக்காளர்கள்: ஆண்களை விட பெண்களே அதிகம்; வேளச்சேரியில் அதிகம்; துறைமுகத்தில் குறைவு

சென்னை: சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிக்கான வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை  40 லட்சத்து 57 ஆயிரத்து 61. இவர்களில் ஆண்களை விட பெண் வாக்காளர்களே அதிகம் உள்ளனர். சென்னை மாவட்டத்தை  உள்ளடக்கிய 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலரும், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையருமான ககன்தீப் சிங் பேடி மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் நேற்று வெளியிட்டார்.

இதில் திமுக சார்பில் மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் மருதுகணேஷ், அதிமுக சார்பில் முன்னாள் எம்பி பாலகங்கா, காங்கிரஸ் சார்பில் துணை தலைவர் தாமோதரன், பாஜ சார்பில் கராத்தே தியாகராஜன், சுமதி வெங்கடேசன் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள், கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலரும், துணை ஆணையாளருமான விஷூ மகாஜன், மாவட்ட வருவாய் அலுவலர் (தேர்தல்) ஜி.குலாம்  ஜிலானி பப்பா, மாநகராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து, மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி அளித்த பேட்டி: இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி சென்னை மாவட்டத்தில் உள்ளடக்கிய 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் 1.1.2022ம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு 2022ம் ஆண்டின் சிறப்பு சுருக்க முறை திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இச்சுருக்க முறை திருத்தம் தொடர்பாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வரைவு வாக்காளர் பட்டியல் பெருநகர சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் 4, 5, 6, 8, 9, 10, 13 மற்றும்  வாக்குச்சாவடி மையங்களிலும் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படும். பொதுமக்கள் தங்களது பெயர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் குறித்த விவரங்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனவா என சரிபார்த்துக் கொள்ளலாம்.

மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாமல் உள்ளவர்கள் மற்றும் 1.1.2022 அன்று 18 வயது நிறைவு அடைபவர்கள் (1.1.2004ம் தேதிக்கு முன்பாக பிறந்தவர்கள்) படிவம் 6-ஐ பூர்த்தி செய்தும், பெயர்கள் நீக்கம் தொடர்பாக படிவம் 7ஐ பூர்த்தி செய்தும், பதிவுகளில் திருத்தம் தொடர்பாக படிவம் 8ஐ பூர்த்தி செய்தும், சட்டமன்ற தொகுதிக்குள்ளேயே ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு குடிபெயர்ந்து புதிய வசிப்பிடத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவம் 8ஐ பூர்த்தி செய்தும், அதற்கான ஆவண ஆதார நகலினை இணைத்தும் சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர், பெருநகர சென்னை மாநகராட்சி மண்டல அலுவலரின் அலுவலகத்தில் இன்று (நேற்று) முதல் வருகிற 30ம் தேதி முடிய உள்ள காலத்திற்குள் விண்ணப்பிக்கலாம்.

வருகிற 13, 14, 27, 28ம் தேதிகளில் (சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில்) வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறும். மேலும் பொதுமக்கள் www.nvsp.in என்ற இணையதளம் மூலமாகவும் தங்களுடைய பெயர்கள் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தம் செய்யலாம். சென்னை மாவட்டத்தில் 3,750 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு அதன் அடிப்படையில் தற்போது வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதிகபட்சமாக பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் 297 வாக்குச்சாவடிகளும், குறைந்தபட்சமாக எழும்பூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் 169 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு 19.3.2021 அன்று வெளியிடப்பட்ட வாக்காளர்கள் பட்டியலின்படி, ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 19,94,505, பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 20,61,473, மூன்றாம் பாலின வாக்காளர்களின் எண்ணிக்கை 1,083 என மொத்தம் சென்னை மாவட்டத்தின் வாக்காளர்களின் எண்ணிக்கை 40,57,061 ஆகும். நடந்து முடிந்த தொடர் திருத்தத்தில் சென்னை மாவட்டத்தில் 19,92,198 ஆண் வாக்காளர்கள், 20,60,767 பெண் வாக்காளர்கள் மற்றும் 1,073 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 40,54,038 வாக்காளர்களின் பெயர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

இதில் 10,621 ஆண் வாக்காளர்கள், 11,862 பெண் வாக்காளர்கள் மற்றும் 9 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 22,492 வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் 12,928 ஆண் வாக்காளர்கள், 12,568 பெண் வாக்காளர்கள் மற்றும் 19 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 25,515 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக துறைமுகம் தொகுதியில் 1,76,679 வாக்காளர்களும், அதிகபட்சமாக வேளச்சேரி தொகுதியில் 3,15,502 வாக்காளர்களும் உள்ளனர். ஜனநாயகத்தினை வலுப்படுத்த, தகுதியுள்ள அனைவரும் வாக்காளர் பட்டியலில் இடம்பெற ஏதுவாக வரைவு வாக்காளர் பட்டியலை பார்வையிட்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த  வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

சட்டமன்ற தொகுதி    ஆண்    பெண்      3ம் பாலினம்    வாக்காளர்கள்
ஆர்.கே. நகர்    1,25,553    1,35,092    104    2,60,749
பெரம்பூர்    1,54,020    1,59,410    71    3,13,501
கொளத்தூர்    1,36,980    1,43,265    65    2,80,310
வில்லிவாக்கம்             1,24,621           1,29,835              61           2,54,517
திரு.வி.க.நகர்    1,05,644    1,12,497    51    2,18,192
எழும்பூர்    95,942    97,671    54    1,93,667
ராயபுரம்    94,476    98,745    55    1,93,276
துறைமுகம்    91,998    84,624    57    1,76,679
சேப்பாக்கம்-
திருவல்லிக்கேணி    1,15,085    1,19,223    38    2,34,346
ஆயிரம் விளக்கு    1,17,520    1,23,029    92    2,40,641
அண்ணாநகர்    1,40,373    1,45,873    85    2,86,331
விருகம்பாக்கம்    1,44,994    1,46,025    91    2,91,110
சைதாப்பேட்டை    1,36,953    1,42,398    75    2,79,426
தியாகராய நகர்    1,20,650    1,23,889    46    2,44,585
மயிலாப்பூர்    1,31,411    1,39,756    39    2,71,206
வேளச்சேரி    1,55,978    1,59,435    89    3,15,502
மொத்தம்    19,92,198    20,60,767    1,073    40,54,038

Tags : Chennai ,Velachery , 40.54 lakh voters in Chennai: Women outnumber men; More in Velachery; Decrease in port
× RELATED சென்னை ஆலந்தூரில் வளர்ப்பு நாய்...