சசிகலாவை அதிமுகவில் சேர்க்க பேச்சுவார்த்தை? ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் மதுரையில் திடீர் ஆலோசனை: மாஜி அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் பங்கேற்பு

மதுரை: அதிமுகவை கைப்பற்றுவதற்காக சசிகலா தீவிர முயற்சி செய்து வருகிறார். முதல்கட்டமாக சுற்றுப்பயணம், தொண்டர்கள் சந்திப்பு என பரபரப்பாக இருக்கிறார். சசிகலாவை அதிமுகவில் சேர்க்க முடியாது என கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையில் பேட்டி அளித்த ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், சசிகலாவை சேர்ப்பது தொடர்பாக தலைமைக்கழக நிர்வாகிகளுடன் கூடி பேசி முடிவு எடுப்போம் என்றார்.

மேலும், சசிகலா பற்றி அவதூறாக பேசிய எடப்பாடி பழனிசாமிக்கும் கண்டனம் தெரிவிக்கும் விதமாக கருத்து கூறியிருந்தார். இதனால் கட்சியில் இரட்டை தலைமைக்குள் பகிரங்க மோதல் நிலவுவது வெளிச்சத்திற்கு வந்தது. ஓபிஎஸ்சின் பேச்சுக்கு எடப்பாடி நேரடியாக பதிலளிக்கவில்லை. இந்தச் சூழலில் எடப்பாடி பழனிசாமியின் தூதுவராக மதுரையை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவர், ஓபிஎஸ் வீட்டிற்கு சென்று பேசினார். ஆனால், ஓ.பி.எஸ். அவரிடம் கடுமையாக பேசி அனுப்பி விட்டதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், நேற்று பசும்பொன் சென்று, முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். பின்பு தேவரின் தங்கக்கவசத்தை வங்கியில் ஒப்படைப்பு செய்வதற்காக மதியம் மதுரை வந்தார். பின்னர் மதுரை அண்ணா பஸ் நிலையம் அருகே தனியார் ஓட்டலில் தனது ஆதரவாளர்களுடன் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டார். இதில், முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, நத்தம் விஸ்வநாதன், உதயகுமார், பாஸ்கரன் மற்றும் ராஜன்செல்லப்பா எம்எல்ஏ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் இந்த ஆலோசனை நடந்தது. இதில் சசிகலா விவகாரம் தொடர்பாகவும் பேசப்பட்டதாக தெரிகிறது.

ஆலோசனை முடிந்து வெளியே வந்த ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘பெரியாறு அணையில் 142 அடி நீரை தேக்க ஜீவாதார உரிமையை ஜெயலலிதா பெற்று தந்துள்ளார். 142 அடி வரை தேக்க அரசாணை வெளியிட்டார். அதிமுக ஆட்சியில் தொடர்ந்து 3 முறை 142 அடி நீர் தேக்கப்பட்டது. தற்போது பெரியாறு அணையில் 142 அடி நீரை தேக்க கேரள அரசு பல்வேறு இடையூறுகள் செய்து வருகிறது, கேரள அரசின் இடையூறுகளை திமுக தலைமையிலான தமிழக அரசு தட்டிக் கேட்க வேண்டும். இரு மாநில அரசுகளுக்கு எதிராக 5 மாவட்டங்களில் அதிமுக சார்பில் போராட்டம் நடத்த கூட்டத்தில் முடிவு செய்துள்ளோம். போராட்டம்  நடைபெறும் இடம், நாள் குறித்து நானும், இணை ஒருங்கிணைப்பாளர்  எடப்பாடி பழனிசாமியும் இணைந்து அறிவிப்போம்’’ என்றார்.

‘‘கட்சியில் மீண்டும் ஒற்றை தலைமையா? சசிகலாவை அதிமுகவில் இணைப்பதற்காக ஆலோசனை நடந்ததா’’ என நிருபர்கள் அடுத்தடுத்து கேள்வி கேட்டனர். அதற்கு ஓபிஎஸ் பிடிகொடுக்காமல், ‘‘போதும்.. போதும்.. போங்கள்’’ என கூறிவிட்டு புறப்பட்டு சென்றார். ஆலோசனையில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர்களும், எதுவும் கருத்து தெரிவிக்காமல், அங்கிருந்து அவசர அவசரமாக கிளம்பிச் சென்றனர். தனது ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் தனி ஆலோசனை கூட்டம் நடத்தியதும், எடப்பாடி பழனிசாமியை கலந்தாலோசிக்காமல் தனிப்பட்ட முறையில் போராட்ட அறிவிப்பை வெளியிட்டதும் அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எடப்பாடி பழனிசாமியை கலந்தாலோசிக்காமல் தனிப்பட்ட முறையில் போராட்ட அறிவிப்பை ஓபிஎஸ் வெளியிட்டார்.

Related Stories: