×

தஞ்சை அரசு மருத்துவமனையில் பெண் பலி பிரசவத்தின்போது வயிற்றில் ஊசி வைத்து தைத்ததாக புகார்: நஷ்டஈடு கேட்டு கணவர் கலெக்டரிடம் மனு

தஞ்சை: தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. அப்போது, தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே இளங்கார்குடியை சேர்ந்த கூலித்தொழிலாளி விஜயகுமார் (39), தனது 2 வயது ஆண் குழந்தை மற்றும் பச்சிளம் ஆண் குழந்தை மற்றும் உறவினர்களுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். கலெக்டர் தினேஷ் பொன்ராஜிடம் அவர் கண்ணீருடன் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருந்ததாவது: பட்டதாரியான எனது மனைவி லட்சுமிக்கு (33) தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் செப்டம்பர் 29ம் தேதி அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் லட்சுமிக்கு மஞ்சள் காமாலை நோய் இருப்பதாக ஐசியூ வார்டில் அனுதிக்கப்பட்டார்.

அங்கு சரியான சிகிச்சை அளிக்காததால் அக்டோபர் 17ம் தேதி லட்சுமியை வீட்டுக்கு அழைத்து சென்றோம். மறுநாள் 18ம் தேதி வீட்டிற்கு வந்த அரசு மருத்துவமனை நர்ஸ்கள், லட்சுமியை மீண்டும் வலுக்கட்டாயமாக தஞ்சை அரசு  மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 22ம்  தேதி லட்சுமி இறந்துவிட்டார். முன்னதாக எனது மனைவிக்கு எடுக்கப்பட்டுள்ள ஸ்கேன் ரிப்போர்ட்டில் வயிற்று பகுதியில் ஊசி போன்ற ஒரு பொருள் இருப்பது தெரிய வருகிறது. இதனால் என் மனைவிக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் தான் இறந்து விட்டார் என சந்தேகிக்கிறோம். சம்பந்தப்பட்ட நர்ஸ்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நஷ்ட ஈடாக ரூ.25 லட்சம் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. இது குறித்து விசாரணை நடத்துதாக கலெக்டர் தெரிவித்தார்.

Tags : Tanjore Government Hospital , Woman dies at Tanjore Government Hospital Complaint of needle stitching during delivery
× RELATED தஞ்சையில் அரசு மருத்துவமனையின் சத்து...