×

கீழ்ப்பாக்கத்தில் இந்து அறநிலையத்துறையிடம் இருந்த காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் மேல்நிலைப்பள்ளியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்: மாணவர்களுக்கு சீருடை, புத்தகப்பை வழங்கினார்

சென்னை: கீழ்ப்பாக்கத்தில் இந்து அறநிலையத்துறையிடம் இருந்த காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து மாணவ, மாணவிகளுக்கு சீருடை மற்றும் புத்தகப்பை வழங்கினார். காஞ்சிபுரம், ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான சென்னை, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் 32 கிரவுண்ட் இடத்தில் சீதா கிங்ஸ்டன் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி இயங்கி வந்தது. இந்த பள்ளியை நிர்வகித்து வந்த கலவலகண்ணன் செட்டி சாரிட்டிஸ் நிர்வாகத்தால் இதனை தொடர்ந்து நடத்த இயலாத நிலை காரணமாக இப்பள்ளி நடந்த இடம், திருக்கோயில் வசம் 13.6.2021 அன்று சுவாதீனம் பெறப்பட்டது.

இந்த பள்ளியில் 700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வந்த விவரம் குறித்து முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. மாணவ செல்வங்களின் எதிர்காலம்,  அப்பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்று இப்பள்ளியை இந்து சமய அறநிலையத்துறை ஏற்று நடத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி, அப்பள்ளி காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு, திருக்கோயில் நிர்வாகத்தின் மூலம் நடத்தப்பட்டு வருகிறது.  

ஏற்கனவே திருக்கோயில் நிர்வாகத்தின் மூலம் சுவாதீனம் பெறப்பட்ட இடத்தில் 12.5 கிரவுண்ட் இடத்தை பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டும், அவர்களது விளையாட்டு திறனை ஊக்குவிக்கும் நோக்கிலும் விளையாட்டு மைதானமாக மாற்றவும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமை செயலகத்தில் சென்னை, கீழ்ப்பாக்கம்  நெடுஞ்சாலையில் செயல்பட்டு வந்த சீதா கிங்ஸ்டன் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்  பள்ளியை இந்து சமய அறநிலையத்துறை ஏற்று, பெயர் மாற்றம் செய்யப்பட்ட காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியை வீடியோ கான்பரன்சிங் மூலமாக தொடங்கி வைத்து, மாணவ, மாணவிகளுக்கு சீருடைகள் மற்றும்  புத்தகப்பைகளை வழங்கினார்.

இந்த பள்ளியில் எல்.கே.ஜி முதல் 12ம் வகுப்பு வரை அரசு நிர்ணயித்த கல்வி கட்டணத்தை விட மிகக்குறைந்த கல்வி கட்டணத்தில் மாணவ, மாணவிகள் சேர்க்கை நடைபெற்று, ஏற்கனவே இப்பள்ளியில் பணிபுரிந்த 45 ஆசிரியர்களும், 12 ஆசிரியர் அல்லாத பணியாளர்களும் தொடர்ந்து பணிபுரிய வழிவகை செய்யப்பட்டுள்ளது. பள்ளியின் தரத்தை உயர்த்தும் நடவடிக்கையால் தற்போது மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து, மொத்தம் 837 மாணவ, மாணவிகள் சேர்ந்துள்ளனர்.

பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகள் ரூ.27 லட்சத்து 84 ஆயிரம் செலவில் செயல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கூடுதல் வசதிகளுக்காக ரூ.1 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், தலைமை செயலாளர் இறையன்பு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மை செயலாளர் சந்தரமோகன், இந்துசமய அறநிலைய துறை ஆணையர் குமரகுருபரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : Chief Minister ,MK Stalin ,Kanchipuram Ekambaranathar High School ,Hindu Charitable Trusts , Chief Minister MK Stalin inaugurated the Kanchipuram Ekambaranathar High School, which was under the auspices of the Hindu Charitable Trusts at the lower level: He distributed uniforms and book bags to the students.
× RELATED அநீதிக்கு எதிரான வெற்றி நம் நாட்டின்...