மோடி பேரணியில் குண்டுவெடிப்பு வழக்கு 4 குற்றவாளிகளுக்கு மரணதண்டனை: என்ஐஏ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

பாட்னா: குண்டுவெடிப்பு வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்து என்ஐஏ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்தது.கடந்த 2013ல் பாஜ கட்சியின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்ட பிறகு பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் பாஜ பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில்  மோடி பேசுவதற்கு முன்பாக, மைதானப் பகுதியில் 6 குண்டுகள் வெடித்தன. இதில் 6 பேர் உயிரிழந்தனர். சுமார் 90 பேர் காயம் அடைந்தனர். அருகில் உள்ள ரயில் நிலையத்திலும் குண்டு வெடித்தது. அங்கிருந்த வெடிக்காத 4 குண்டுகளும் கைப்பற்றப்பட்டன.இந்த சம்பவம் தொடர்பாக பாட்னா என்ஏஐ சிறப்பு நீதிமன்றம் விசாரணை நடத்தியது. அதில், 11 பேர் மீது போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில் ஒருவர் மைனர் என்பதால், அவரது வழக்கு சிறார் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. மற்றொருவர் மீதான குற்றம் நிரூபிக்கப்படாததால் அவர் விடுவிக்கப்பட்டார். எஞ்சிய 9 பேர் குற்றவாளிகள் என நீதிபதி குர்விந்தர் சிங் மல்ஹோத்ரா கடந்த மாதம் 27ம் தேதி தீர்ப்பளித்தார். தண்டனை விவரங்கள் நவம்பர் 1ம் தேதி அறிவிக்கப்படும் என நீதிபதி தெரிவித்திருந்தார்.

அதன்படி, இந்த வழக்கில் நீதிபதி மல்ஹோத்ரா தண்டனை விவரங்களை நேற்று அறிவித்தார். அதில், குற்றவாளிகள் இம்தியாஸ் அன்சாரி, பிளாக் பியூட்டி என்கிற ஹைதர் அலி, முகம்மது முஜிபுல்லா அன்சாரி, நோமன் அன்சாரி ஆகிய 4 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

உமர் சித்திக், அசாருதீன் குரேஷி ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், 3 பேருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இதன் மூலம் குண்டுவெடிப்பில் பலியான அப்பாவி பொதுமக்களின் குடும்பங்களுக்கு நியாயம் கிடைத்துள்ளதாக அரசு தரப்பு வக்கீல் லாலன் பிரசாத் சிங் கூறி உள்ளார்.

Related Stories: