×

ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ் அண்ணனிடம் மேலும் 5 நாள் விசாரிக்க அனுமதி

ஊட்டி: கொடநாடு கொலை வழக்கில் சாட்சியங்களை கலைத்ததாக கைதான கனகராஜ் அண்ணனிடம் மேலும் 5 நாட்கள் விசாரணை நடத்த போலீசாருக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியான ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ் மர்மமான முறையில் விபத்தில் பலியானார். இவரது அண்ணன் தனபால் மற்றும் உறவினர் ரமேஷ் ஆகியோர் சாட்சியங்களை கலைத்ததாகவும், தடயங்களை அழித்ததாகவும்  கடந்த வாரம் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டனர். தனபாலிடம் விசாரணை மேற்கொள்வதற்காக கடந்த 28ம் தேதி போலீசார் 5 நாள் காவலில் எடுத்தனர். மறுநாள் ரமேஷை காவலில் எடுத்தனர். அவர்கள் 2 பேரிடமும் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாகவும், இந்த வழக்கு தொடர்பாக கனகராஜ் அவர்களிடம் கூறியதை பற்றியும் கேட்டனர்.

மேலும் கனகராஜின் செல்போன் தகவல்கள் அழிக்கப்பட்டது தொடர்பாகவும் துருவி துருவி விசாரணை நடத்தினர். அப்போது பல தகவல்களை தனபால் போலீசாரிடம் கூறியிருப்பதாக தெரிகிறது. இந்நிலையில் அவரது விசாரணை காலம் நேற்று முடிந்தது. ஆனால் வழக்கு தொடர்பாக இன்னும் பல தகவல்களை அவரிடம் கேட்டு பெற போலீசார் முடிவு செய்தனர். எனவே நேற்று கோர்ட்டில் தனபாலை ஆஜர்படுத்திய போலீசார், அவரிடம் மேலும் 7 நாட்கள் விசாரணை நடத்த அனுமதி வழங்க கோரி மகளிர் நீதிமன்ற நீதிபதி தரிடம் மனு செய்தனர். ஆனால், மேலும் 5 நாட்கள் தனபாலிடம் விசாரணை நடத்த நீதிபதி அனுமதி அளித்து உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து மீண்டும் அவரை போலீசார் அழைத்து சென்று விசாரணையை துவக்கி உள்ளனர். ரமேஷின் காவல் விசாரணை இன்று முடிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.




Tags : Jayalalithaa ,Kanagaraj Annan , Jayalalithaa's former car driver To Kanagaraj's brother Permission to inquire further 5 days
× RELATED ஜெயலலிதாவுக்கு சொந்தமான நகைகளை...