×

தடை விலகியதால் ராமேஸ்வரத்தில் 22 தீர்த்தங்களில் நீராடி பக்தர்கள் சுவாமி தரிசனம்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலில் தீர்த்தமாட இருந்த தடை விலகியதால் 190 நாட்களுக்குப்பின் இன்று 22 தீர்த்தங்களில் பக்தர்கள் நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். கொரோனா பரவலையடுத்து கடந்த ஆண்டு மார்ச் 24 முதல் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்குள் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இந்த ஆண்டு துவக்கத்தில் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து கோயிலுக்குள் தீர்த்தமாட பிப்.2ம் தேதி முதல் அனுமதி அளிக்கப்பட்டது. கொரோனா இரண்டாவது அலை பரவலை தொடர்ந்து மீண்டும் ஏப்.24ல் கோயிலுக்குள் பக்தர்கள் தீர்த்தமாடவும், சுவாமி தரிசனத்திற்கும்  தடை விதிக்கப்பட்டது.

தமிழக அரசின் தளர்வுகளால் சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் கோயிலுக்குள் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். தமிழக பக்தர்கள் மட்டுமே கோயிலில் சுவாமி தரிசனம் செய்து வந்தனர். வெளி மாநில பக்தர்களின் வருகை முற்றிலும் நின்று போனதால் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்திருந்தது. இந்த நிலையில், அரசு உத்தரவுப்படி இன்று முதல் கோயிலுக்குள் பக்தர்கள் தீர்த்தமாட கோயில் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. தீர்த்தமாட இருந்த தடை விலகியதால் 6 மாதங்களுக்குப் பின் இன்று அதிகாலை முதல் பக்தர்கள் கோயிலுக்குள் தீர்த்தமாடுதல் துவங்கியது.

இதையொட்டி இன்று அதிகாலை 4.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு 5.30 க்கு ஸ்படிகலிங்க பூஜை நடைபெற்றது. ஸ்படிலிங்க தரிசனத்திற்கு வழக்கம் போல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து கோயில் வடக்கு கோபுர வாயிலில் அமைந்துள்ள தீர்த்தக்கவுண்டர் திறக்கப்பட்டது. அதிகாலையில் அகனிதீர்த்த கடலில் புனித நீராடிய ஏராளமான வெளியூர் பக்தர்கள் வரிசையில் நின்று தீர்த்தமாட கட்டணம் செலுத்தி கோடி தீர்த்தம் உள்ளிட்ட 22 தீர்த்தங்களிலும் நீராடினர். பின் சுவாமி-அம்பாள் சன்னதியில் சமூக இடைவெளியை கடைப்பிடித்து வரிசையில் நின்று ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாளை தரிசித்து சென்றனர்.

ஏராளமான பக்தர்கள் தேங்காய் உடைத்து அர்ச்சனை செய்து வழிபட்டனர். இன்று காலை 5.30 முதல் 8 மணி வரை சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் 22 தீர்த்தங்களில் நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் தீர்த்தமாட கோயில் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளதால் வரும் நாட்களில் அதிகளவில் பக்தர்கள் வருவார்கள் என்பதால், வருவாய் இன்றி தவித்த தீர்த்தம் ஊற்றும் யாத்திரை பணியாளர்கள், தங்கும் விடுதி உரிமையாளர்கள், உணவு விடுதி உள்ளிட்ட சாலையோர சிறு வியாபாரிகள், ஆட்டோ வாகன ஓட்டுனர்கள் அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

யாகத்திற்கு தடை நீடிப்பு
* ராமநாதசுவாமி கோயிலில் தீர்த்தமாட, அர்ச்சனை செய்து சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் கோயில் முதல் பிரகாரத்தில் பக்தர்கள் சிறப்பு பூஜை, யாகம் போன்றவற்றை நடத்துவதற்கு தடை நீடிக்கிறது. வழக்கம் போல் காலை-மாலையில் கோயில் நடை திறந்து மீண்டும் அடைக்கும் நேரம் வரை பக்தர்கள் கோயிலுக்குள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். தீர்த்தமாடுதலும் வழக்கமான நடைமுறைகளின்படி நடைபெறும்.

கோயிலுக்குள் செல்லும் பக்தர்கள் சுகாதாரத்துறையின் வழிகாட்டுதல்படி கட்டாயம் மாஸ்க் அணிந்து போதிய இடைவெளியில் வரிசையாக சென்று தீர்த்தமாடுதல், சுவாமி தரிசனம் செய்ய வேண்டும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.  ராமேஸ்வரம் கோயிலில் தீர்த்தமாட கோயில் நிர்வாகம் அனுமதி அளித்தாலும், ராமேஸ்வரத்தில் தொடர்ந்து மழை பெய்து வந்ததாலும், தீபாவளி நெருங்குவதாலும் வழக்கத்தைவிட நேற்று குறைந்த அளவிலேயே பக்தர்கள் வருகை இருந்தது.

Tags : Vedi ,Swami ,Rameswara , Devotees bathe in 22 theerthams in Rameswaram after the ban was lifted
× RELATED சரணம்… சரணம்… சரணம் காணும் சரணாலய புகலூர்