டெல்டாவில் தொடரும் கனமழை: 56,000 ஏக்கர் சம்பா, தாளடி நீரில் மூழ்கின: அரியலூரில் சுவர் இடிந்து பாட்டி, பேரன் பலி

திருச்சி: டெல்டா மாவட்டங்களில் 4வது நாளாக நேற்று கனமழை பெய்தது. இன்று காலையும் பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மழை காரணமாக திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில்  50,000 ஏக்கர் சம்பா, தாளடி பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த 2 வாரத்திற்கும் மேலாக  மழை ெபய்து வருகிறது. இந்நிலையில் கடந்த 7 நாட்களுக்கு முன் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதற்கு ஆதாரமாக வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது.

இதனால் கடந்த மாதம் 28ம் தேதி இரவு முதல் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் ேநற்றுமாலை மற்றும் இரவில் இடியுடன் கன மழை பெய்தது. இன்று தமிழகத்தில் பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது. டெல்டா மாவட்டங்களில் பல இடங்களில் மழை பெய்கிறது. திருவாரூர் மாவட்டத்தில் நேற்று பகல் முழுவதும் விட்டு விட்டு லேசான மழை பெய்தது. இரவு 10  முதல் 12 மணி வரை மாவட்டம் முழுவதும் லேசான மழை பெய்தது.

பின்னர் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 4 மணி முதல் இடி, மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கியது. இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளாகிய நன்னிலம், திருத்துறைப்பூண்டி, வலங்கைமான், நீடாமங்கலம், குடவாசல் உள்ளிட்ட இடங்களிலும் கனமழை பெய்தது. மாவட்டம் முழுவதும்  50,000 ஏக்கர் சம்பா, தாளடி பயிர்கள் நீரில் மூழ்கியது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து கலெக்டர் காயத்திரி கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

நாகை மாவட்டத்தில் நள்ளிரவு 1 மணி முதல்  2 மணி வரை பலத்த மழை பெய்தது. வேதாரண்யம், நாகூர், திருமருகல் வேளாங்கண்ணி  உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. காரைக்கால் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தீபாவளி வரை பள்ளிகளுக்கு விடுமுறைவிடப்பட்டுள்ளதால் பள்ளிகள் இயங்கவில்லை. தஞ்சையில் நேற்று மாலை முதல் இன்று அதிகாலை வரை விட்டு விட்டு லேசான மழை பெய்துவருகிறது. திருவையாறு, கும்பகோணம், ஒரத்தநாடு, பாபநாசம் உள்ளிட்ட பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது.

தொடர்மழையால், தஞ்சையில் 6000 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளது. மேலும் தஞ்சை நியூ ஹவுசிங் யூனிட் பகுதியில் இருந்த 100 ஆண்டு பழமையான ஆலமரம் வேரோடு சாய்ந்தது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கல்லணை கால்வாய் பாசன பகுதிகளான அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி உள்ளிட்ட பகுதிகளில் இரவு விட்டு விட்டு லேசான மழை பெய்தது. இதனால் அப்பகுதியில் உள்ள வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. மாவட்டத்தில் இன்று காலை வரை ஆதனக்கோட்டை 17, பெருங்களூர் 45, புதுக்கோட்டை 6, ஆலங்குடி 12.5, கந்தர்வகோட்டை 17, கறம்பக்குடி 18.8, மழையூர் 17.6, மணமேல்குடி 15, இலுப்பூர் 16, கீரனூர் 22மி.மீ மழை பெய்துள்ளது.

கரூர் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை விட்டு விட்டு லேசான மழை பெய்தது. மேலும் குளித்தலை, அரவக்குறிச்சி, க.பரமத்தி, வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் லேசான மழை பெய்தது. இதனால் காலை சென்ற வாகன ஓட்டிகள் மழையில் நனைந்தபடி சென்றனர். பெரம்பலூர் மாவடத்தில் நேற்று பகல் முழுவதும் விட்டு விட்டு லேசான மழை பெய்தது. மாலை 5 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை விட்டு விட்டு மழை பெய்தது. இதனால் சாலை முழுவதும் குளம்போல் தண்ணீர் தேங்கியது. அரியலூர் மாவட்டத்தில் இரவு முழுவதும் விட்டு விட்டு லேசான மழை பெய்தது.

இதேபோல் ஜெயங்கொண்டம், செந்துறை, திருமானூர், ஆண்டிமடம் உள்ளிட்ட பகுதிகளிலும் லேசான மழை பெய்தது. நேற்று இரவு பெய்த மழையால், ஜெயங்கொண்டம் நான்கு ரோடு அருகே தேவாங்க  முதலியார் தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரது மாடி வீட்டின் 2 தளத்தில்  இருந்த நீர்தொட்டி இடிந்து பக்கத்தில் உள்ள ஓட்டு வீட்டின் மேல் விழுந்தது. இதில் உள்ளே  தூங்கிக்கொண்டிருந்த லட்சுமி(85), அவரது பேரன் அஜித்குமார்(25) ஆகியோர் அந்த  இடத்திலேயே இறந்தனர். அவர்களது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

திருச்சி நேற்று காலை முதல் மதியம் வரை லேசான தூரல் மழை பெய்தது. பின்னர் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை இடி, மின்னலுடன் கன மழை கொட்டியது. அப்போது கடும் பனிமூட்டம் படர்ந்திருந்ததால் சாலையில் சென்ற வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி சென்றன. பின்னர் இரவு முழுவதும் விட்டு விட்டு லேசான மழை பெய்தது. இதேபோல்  திருவெறும்பூர், சமயபுரம், ஸ்ரீரங்கம், லால்குடி, மணப்பாறை, புத்தாநத்தம், துவரங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளிலும் லேசான மழை பெய்தது. இன்று பல இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Related Stories:

More