காங். தலைவர்கள் கட்சிக்கு கொடுத்த பரிசு எது?.. அகிலேஷின் விமர்சனத்துக்கு பிரியங்கா பதிலடி

லக்னோ: காங்கிரஸ் தலைவர்கள் தங்களது கட்சிக்கு கொடுத்த பரிசு குறித்து அகிலேஷின் விமர்சனத்துக்கு பிரியங்கா காந்தி பதிலடி கொடுத்துள்ளார். உத்தர பிரதேசத்தில் அடுத்தாண்டு தொடக்கத்தில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருவருக்கொருவர் எதிராக குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றன. ஆளும் பாஜகவுக்கு எதிராக பேசிவந்த சமாஜ்வாதி தலைவரும், முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ், இப்போது காங்கிரஸ் கட்சியை தாக்கியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘காங்கிரசில் உள்ள அனைத்து தலைவர்களையும் அமலாக்கத்துறை, சிபிஐ விசாரித்து வருகிறது. இதுதான், அவர்கள் அக்கட்சிக்கு கொடுத்த பரிசு. காங்கிரஸ் பின்பற்றிய வழியை பாஜக தற்போது பின்பற்றி வருகிறது. காங்கிரசுக்கும், பாஜகவுக்கும் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை’ என்றார். அகிலேஷ் யாதவின் இந்த பேட்டிக்கு பதிலளிக்கும் வகையில் நேற்று கோரக்பூரில் நடந்த கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பேசுகையில், ‘காங்கிரஸ் கட்சியை,

பாஜகவுடன் தொடர்புபடுத்தி சமாஜ்வாதி கட்சி தலைவர் கூறியுள்ளார். காங்கிரஸ் - பாஜகவுக்கும் இடையே எதிரெதிர் அணியாக இருக்கும் போது, எப்படி சாத்தியம்? அவர்கள் ஏன் உங்களுடன் கூட்டணி வைக்கக் கூடாது? காங்கிரஸ் மட்டுமே மக்களுக்காக போராடுகிறது. பாஜக ஆட்சியில் தலித்துகள், நெசவாளர்கள், ஓபிசி மக்கள், ஏழைகள், சிறுபான்மையினர் மற்றும் பிராமணர்கள் மோசமாக நடத்தப்பட்டனர். குரு கோரக்நாத்தின் போதனைகளுக்கு எதிராக யோகி ஆதித்யநாத் ஆட்சி நடத்துகிறார்.

இந்த அரசு நாள்தோறும் மக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த 4.5 ஆண்டுகளாக மாநில அரசு எதையும் செய்யவில்லை.  தற்போது தேர்தல் நெருங்குவதால், தனது பணிகளை பட்டியலிடுகிறது’ என்றார்.

Related Stories:

More