புதுச்சேரி விடுதலை நாள் கொண்டாட்டம்!: கடற்கரை சாலையில் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செய்தார் முதல்வர் ரங்கசாமி..!!

புதுச்சேரி: புதுச்சேரியின் விடுதலை நாள் விழாவை ஒட்டி அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி, தேசிய கொடியை ஏற்றி காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். 250 ஆண்டுகள் பிரெஞ்ச் ஆதிக்கத்தின் கீழ் இருந்த புதுச்சேரியானது கடந்த 1954ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி விடுவிக்கப்பட்டு, இந்திய அரசுடன் இணைந்தது. இதனால் புதுச்சேரி விடுதலை நாள் விழா ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 1ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி புதுச்சேரி கடற்கடையில் நடைபெறக்கூடிய வண்ணமயமான விழாவில் முதல்வர் ரங்கசாமி தேசியக்கொடியை ஏற்றி வைத்து காவல்துறை, தேசிய மாணவர் படையினர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

பின்னர் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவில் சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள். மற்றும் விடுதலை போராட்ட தியாகிகள் பங்கேற்றனர். இதையடுத்து முதல்வர் ரங்கசாமி விடுதலை நாள் உரையாற்றினார். அவர் பேசுகையில், சாலைகளை சீரமைக்க 33 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் அரசு துறைகளில்  காலியாக உள்ள 10,000 பணியிடங்கள் நிரப்பப்படும் என்றார்.

இதேபோன்று காரைக்கால் மாவட்டத்தில் அமைந்துள்ள கடற்கரை சாலையில் நடைபெற்ற விழாவில் புதுச்சேரி போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்திர பிரியங்கா கலந்துக்கொண்டு தேசிய கொடி ஏற்றிவைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் சர்மா, முதுநிலை காவல் கண்காணிப்பாளர் நிஹாரிகா பட் உள்ளிட்ட அரசு அதிகாரிகளும், பொதுமக்களும் இந்த விழாவில் கலந்துக் கொண்டனர்.

Related Stories:

More