×

விடுதலைப் போரில் தமிழகம், வ.உ.சி.யின் வாழ்க்கை வரலாறு குறித்து அரசு பேருந்தில் நகரும் புகைப்படக் கண்காட்சிகள் திறப்பு!!

சென்னை:விடுதலைப் போரில் தமிழகம் என்ற புகைப்படக் கண்காட்சி மற்றும் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யின் வாழ்க்கை வரலாறு குறித்து அரசுப் பேருந்தில் அமைக்கப்பட்டுள்ள நகரும் புகைப்படக் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை, கோயம்பேடு புறநகர் பேருந்து நிலைய வளாகத்தில் இன்று (1ம் தேதி) திங்கட்கிழமை காலை 11 மணியளவில் 75வது சுதந்திர தின விழா ‘சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா’ ஆண்டையொட்டி, செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் இந்திய விடுதலைக்காகப் பாடுபட்ட தேசத் தலைவர்களைப் போற்றிச் சிறப்பிக்கும் வகையில் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ள ‘விடுதலைப் போரில் தமிழகம்’ என்ற புகைப்படக் கண்காட்சியை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார்.

இக்கண்காட்சியில் இந்திய நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்ட அரும்பெரும் தலைவர்களின் சிலைகள் இடம் பெறுகின்றன. மேலும், தேசத் தலைவர்களைப் போற்றிச் சிறப்பிக்கும் வகையில், தேசத் தலைவர்களின் வரலாற்றுத் தொகுப்புகளின் அரிய புகைப்படங்கள் மற்றும் அறியப்படாத தியாகிகளின் புகைப்படங்கள் இடம் பெறுகின்றன. இப்புகைப்படக் கண்காட்சி இன்று முதல் வருகிற 7ம் தேதி வரை நடைபெறுகிறது. அனுமதி இலவசம்.

மேலும் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாறு குறித்து அரசுப் பேருந்தில் அமைக்கப்பட்டுள்ள நகரும் புகைப்படக் கண்காட்சியினையும், முதல்வர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்த நகரும் புகைப்படக் கண்காட்சிப் பேருந்து, தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலுள்ள பள்ளிகளுக்குச் சென்று மாணவ-மாணவியர்கள் பார்வையிட்டு, தேசப்பற்றினையும் வரலாற்றினையும் அறிந்து கொள்ளும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது.

Tags : Battle of Liberation ,Tamil Nadu ,V. U. D.C. , வ.உ.சி.யின் வாழ்க்கை வரலாறு
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...