×

சென்னைக்கு இதுதான் சூப்பர் தீபாவளி..வேளச்சேரி, மேம்பாலம் பொது மக்கள் பயன்பாட்டிற்கு இன்று முதல் திறப்பு!!

சென்னை: சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கட்டப்பட்ட வேளச்சேரி, மேம்பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்துள்ளார். சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில்,வேளச்சேரி புறவழிச்சாலையில், 2012 ஜூன் 29ம் தேதி ரூ.108 கோடி மதிப்பீட்டில் வேளச்சேரி விஜயநகர் மேம்பாலம் கட்ட அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி தரமணி - லிங்க் ரோடு மற்றும் வேளச்சேரி புறவழிச் சாலை ஆகியவற்றை இணைக்கும் வகையில் இந்த 2 அடுக்கு மேம்பாலம் கட்ட திட்டமிடப்பட்டது.

இந்த பாலத்துக்கும் டெண்டர் விடுவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, கடந்த 2015 டிசம்பர் 23ம்தேதி ஒப்பந்த நிறுவனம் பணியை தொடங்கியது. இந்த பணி ஒப்பந்தப்படி கடந்த 2018 செப்டம்பர் 22ம்தேதிக்குள் முடித்திருக்க வேண்டும். ஆனால், நிலம் கையகப்படுத்தும் பணியில் ஏற்பட்ட தாமதத்தால் இந்த மேம்பாலத்தில் தற்போது வரை இரண்டாம் அடுக்கு பணி முடிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் முதல் அடுக்கு பணி தற்போது வரை நடந்து வருகிறது. இப்பணிகளையும், மேடவாக்கம் மேம்பால பணிகளையும் வரும் டிசம்பர் 31ம் தேதிக்குள் முடிக்க அமைச்சர் எ.வ.வேலு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்நிலையில், வேளச்சேரி மேம்பாலத்தில் இரண்டாம் அடுக்கு மேம்பாலத்தை இன்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. வேளச்சேரி இரண்டாம் அடுக்கு மேம்பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்துள்ளார். தரமணி முதல் 100 அடி சாலை வரை 1,028 மீட்டர் நீளம், 13.5 மீட்டர் உயரத்தில் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. புதிதாக திறக்கப்பட்டுள்ள மேம்பாலத்தில் நடந்து சென்ற முதல்வர் ஸ்டாலின், காரில் பயணம் மேற்கொண்டார். தொடர்ந்து வேளச்சேரி மேம்பாலத்தில் நடைபெற்று வரும் முதல் அடுக்கு பணிகளயும் முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார்.

Tags : Super ,Chennai ,Vilachcheri , முதல்வர் ஸ்டாலின்
× RELATED சொந்த ஊரில் லக்னோவிடம் மீண்டும்...