×

2030ம் ஆண்டுக்குள் 1.5 டிகிரி செல்சியசாக உலக வெப்பமயமாதலை கட்டுப்படுத்த இலக்கு: ஜி-20 மாநாட்டில் தலைவர்கள் ஒப்புதல்

ரோம்: பாரீஸ் பருவநிலை மாநாட்டின் ஒப்பந்தப்படி, வரும் 2030ம் ஆண்டுக்குள் உலக வெப்பமயமாதலை 1.5 டிகிரி செல்சியசாக கட்டுப்படுத்த ஜி20 உச்சி மாநாட்டில் உலக தலைவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். உலக பொருளாதாரத்தில் 80 சதவீத பங்களிப்பை கொண்ட 20 வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் அடங்கிய ஜி-20 கூட்டமைப்பின் 16வது உச்சி மாநாடு இத்தாலி தலைநகர் ரோமில் நடந்தது. இந்த 2 நாள் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி ரோம் சென்றார். அங்கு, வாடிகன் நகரில் கத்தோலிக்க தலைவர் போப்பாண்டவரை அவர் சந்தித்து பேசினார்.  இதைத் தொடர்ந்து, மாநாட்டின் 2வது மற்றும் கடைசி நாளான நேற்று பருவநிலை மாற்றம் மற்றும் நிலையான வளர்ச்சி குறித்த அமர்வு நடந்தது.

இதில், பங்கேற்ற தலைவர்கள், கடந்த 2015ம் ஆண்டு பாரீஸ் பருவநிலை  மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தப்படி, வரும் 2030ம் ஆண்டுக்குள் உலக வெப்பமயமாதலை பாதியாக அதாவது 1.5 டிகிரி செல்சியசாக கட்டுப்படுத்த ஒப்புதல் அளித்தனர். 2050ம் ஆண்டுக்குள் கார்பன் உமிழ்வை பூஜ்ய நிலைக்கு கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்க உறுதி அளித்துள்ளனர். கார்பன் உமிழ்வுக்கு முக்கிய காரணமே நிலக்கரி பயன்பாடுதான். எனவே, மின் உற்பத்திக்கு முக்கிய எரிபொருளாக நிலக்கரி பயன்படுத்துவதை முற்றிலும் நிறுத்த வேண்டுமென, மாநாட்டில் தலைவர்கள் வலியுறுத்தினர். மேலும், நிலக்கரி தொடர்பான திட்டங்களுக்கு நிதி உதவி வழங்கக் கூடாது எனவும் வலியுறுத்தினர்.  இதைத் தொடர்ந்து, ஜி20 மாநாடு நிறைவு பெற்றது.

அதே நேரம், இங்கிலாந்தின் கிளாஸ்கோ நகரில் பருவநிலை மாநாடு நேற்று தொடங்கியது. இதில், பிரதமர் மோடி பங்கேற்று, உலக வெப்பமயமாதலை எதிர்த்து இந்தியா மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள், யுக்திகள் குறித்து பேச உள்ளார். நாளை அவர் நாடு திரும்புவார்.

பாக். மீது பறந்த மோடி
ஜி-20 மாநாட்டில் பங்கேற்க சென்ற பிரதமர் மோடியின் சிறப்பு விமானம், பாகிஸ்தான் வான் வழியாக சென்றது. இதற்கான அனுமதியை பாகிஸ்தான் அதிகாரிகளிடம் இந்திய விமான போக்குவரத்து ஆணையம் பெற்றது. நாடு திரும்பும்போதும், பாகிஸ்தான் வான்வழியாகவே மோடி திரும்புகிறார்.


Tags : G-20 , Degrees Celsius, Global Warming, G-20 Conference, Leaders Approved
× RELATED தீவிரவாதத்தை சகித்து கொள்ள முடியாது:...