62 ரன் வித்தியாசத்தில் நமீபியாவை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான்

அபுதாபி, நவ. 1: நமீபியா அணியுடனான சூப்பர் 12 சுற்று லீக் ஆட்டத்தில் (2வது பிரிவு), ஆப்கானிஸ்தான் அணி 62 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. ஷேக் சையத் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 160 ரன் குவித்தது. ஹஸ்ரதுல்லா ஸஸாய் 33 ரன் (27 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்), முகமது ஷாஷத் 45 ரன் (33 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்), அஸ்கர் ஆப்கன் 31 ரன் (23 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்), கேப்டன் முகமது நபி 32* ரன் (17 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசினர்.

நமீபியா பந்துவீச்சில் ரூபன், ஜான் நிகோல் தலா 2, ஜேஜே ஸ்மிட் 1 விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து 20 ஓவரில் 161 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நமீபியா களமிறங்கியது. ஆப்கன் வீரர்களின் துல்லியமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய நமீபியா, 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 98 ரன் மட்டுமே எடுத்து 62 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. டேவிஸ் வீஸ் அதிகபட்சமாக 26 ரன் (30 பந்து, 2 பவுண்டரி) எடுத்தார். வான் லிங்கன் 11, ஜான் நிகோல் 14, கேப்டன் எராஸ்மஸ் 12, ரூபன் 12* ரன் எடுத்தனர். ஆப்கானிஸ்தான் பந்துவீச்சில் நவீன் உல் ஹக் 4 ஓவரில் 26 ரன் விட்டுக்கொடுத்து 3 விக்கெட், ஹமித் ஹசன் 4 ஓவரில் 9 ரன்னுக்கு 3 விக்கெட், குல்பாதின் 2, ரஷித் கான் 4 ஓவரில் 14 ரன்னுக்கு 1 விக்கெட் வீழ்த்தினர். நவீன் உல் ஹக் ஆட்ட நாயகன் விருது பெற்றார். ஆப்கானிஸ்தான் 4 புள்ளிகளுடன் 2வது பிரிவில் 2வது இடத்தில் உள்ளது.

Related Stories: