×

2020ல் கொரோனாவால் மன அழுத்த பாதிப்பு; தினமும் 31 சிறுவர்கள் தற்கொலை: தேசிய குற்ற ஆவணத்தில் அதிர்ச்சி தகவல்

புதுடெல்லி: கடந்த ஆண்டு நாடு முழுவதும் ஒவ்வொரு நாளும் சராசரியாக 31 சிறுவர்கள் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  கடந்த 2020ம் ஆண்டில் நாடு முழுவதும், 18 வயதுக்கு உட்பட்ட 11,396 சிறுவர்கள் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக சமீபத்தில் வெளியான தேசிய குற்ற ஆவண காப்பகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது 2019ம் ஆண்டைக் காட்டிலும் 19 சதவீதம் அதிகம். 2019ல் 9,613 சிறுவர்களும், 2018ல் 9,413 சிறுவர்களும்  தற்கொலை செய்துள்ளனர். இந்த 1,396 பேரில் 5,392 பேர் சிறுவர்கள், 6,004 சிறுமிகள். சராசரியாக தினசரி 31 சிறுவர்கள் தற்கொலை செய்துள்ளனர். இதில், குடும்ப பிரச்னை (4,006 பேர்), காதல் விவகாரம் (1,337), உடல் நல பாதிப்பு (1,327) ஆகியவை 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் தற்கொலைக்கு முக்கிய காரணங்களாக உள்ளன.

  இது குறித்து குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு ஒன்றின் துணை இயக்குநர் பிரபாத் குமார் கூறுகையில், ‘‘கடந்த 2020ல் கொரோனாவின் தாக்கம் சிறுவர்களை மனதளவில் பாதித்துள்ளது. பள்ளிகள் மூடல், நண்பர்களை பார்க்க முடியாமல் போதல், தனிமை, வீட்டிலேயே அடைந்திருந்தல், குடும்பத்தின் மூத்த உறவுகளிடமிருந்து குழந்தைகள் விலக்கி வைக்கப்பட்டிருந்தது போன்றவை காரணமாக சிறுவர்களின் மன அழுத்தம் அதிகரித்துள்ளது. இந்த பாதிப்பாலும் சிறுவர்களின் தற்கொலை அதிகரித்துள்ளது,’’ என்றார்.

* பழக்கமில்லாத ஆன்லைன் வகுப்புகள், ஆன்லைன் தேர்வுகளால் ஏற்படும் குழப்பங்கள், அதிகப்படியான மொபைல் போன் பயன்பாடு, அவற்றால் சிறுவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தப் பிரச்னைகளை பெற்றோரும், ஆசிரியர்களும் புரிந்து செயல்பட வேண்டும்.
* பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், வகுப்புகளுக்கு வரும் குழந்தைகளிடம் மனநல பாதிப்பு பிரச்னைகள் இருந்தால் அவற்றை ஆசிரியர்கள் கவனித்து மனநல ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

Tags : corona , Corona, Depression, Child Suicide, National Crime Document,
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...