×

லடாக்கில் எல்லையை பாதுகாக்கும் இந்திய - திபெத் வீரர்கள் 260 பேருக்கு சிறப்பு பதக்கம்: ஒன்றிய அரசு அறிவிப்பு

புதுடெல்லி:   தீவிரவாத அச்சுறுத்தல், சவாலான எல்லைகளில் பாதுகாப்பு பணி, ஆயுத கட்டுப்பாடு, போதை பொருள் தடுப்பு போன்ற பணிகளில் வீர தீர செயல்புரிந்த வீரர்களுக்கு கடந்த 2018ம் ஆண்டு முதல் சிறப்பு பதக்கம் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு, லடாக் எல்லையில் சீன வீரர்களுக்கு எதிராடி சண்டையிட்டு எல்லையை காத்த இந்திய-திபெத் பாதுகாப்பு படை போலீசார் 20 பேருக்கு இந்த சிறப்பு பதக்கம் வழங்கப்பட்டது.  இந்நிலையில், இந்தாண்டு 260 இந்திய-திபெத் பாதுகாப்பு படை போலீசாருக்கு சிறப்பு பதக்கத்தை ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

சீனா படைகளை குவித்துள்ள நிலையில் கிழக்கு லடாக் எல்லையில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுகிறது. இப்படிப்பட்ட நிலையில் கொட்டும் பனியில், 18,800 அடி உயர முகாம்களில் இந்திய திபெத் பாதுகாப்பு படை போலீசார் இரவு பகலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் பணியை மெச்சும் வகையில் இந்த சிறப்பு பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய படையினர் மற்றும் பல்வேறு மாநில போலீசார் உட்பட மொத்தம் 397 பேருக்கு சிறப்பு பதக்கம் வழங்கப்படுகிறது. வரலாற்றில் ஒரே நேரத்தில் ஒரே படைப்பிரிவை சேர்ந்த 260 வீரர்களுக்கு விருது வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

காஷ்மீர் காட்டில் 21 நாளாக தேடும் பணி
காஷ்மீரின் பூஞ்ச் மற்றும் ரஜோரி மாவட்ட எல்லைப் பகுதிகளில் உள்ள காட்டில் பாகிஸ்தானின் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் பதுங்கி உள்ளனர். அவர்களை தேடும் பணியில் 9 பாதுகாப்பு படை வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். இந்த தேடும் பணி 21வது நாளாக நேற்றும் தொடர்ந்தது. இதுவரை 9 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். தற்போது காட்டின் மையப்பகுதிகளில் தேடும் பணி நடக்கிறது. இதனிடையே, தீவிரவாதிகளை தேடும் பணிகாரணமாக மூடப்பட்டிருந்த ஜம்மு-ரஜோரி தேசிய நெடுஞ்சாலை 2 வாரங்களுக்குப் பிறகு நேற்று திறக்கப்பட்டது.


Tags : Ladakh ,Union Government , Ladakh, Border Security, Indo-Tibetan Veterans, Special Medal, United Government
× RELATED மோடியின் சீன உத்தரவாதம் லடாக் மக்களுக்கு துரோகம்: கார்கே சாடல்