ஓன்றுபட்டால்தான் முன்னேற முடியும்: பிரதமர் மோடி அறிக்கை

புதுடெல்லி: எந்த சவாலையும் எதிர்கொள்ளும் திறன் இந்தியா முழுவதும் உருவாகி வருவது ஒற்றுமையை வலியுறுத்துவதாக உள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சர்தார் வல்லபாய் படேலின் 146 பிறந்த நாளான நேற்று, ‘தேசிய ஒருமைப்பாட்டு தினம்’ ஆக கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு வெளிநாட்டு பயணத்தில் உள்ள பிரதமர் மோடி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபாய் படேல், நாட்டின் பல பகுதிகளை ஒருங்கிணைத்த பெருமைக்குரியவர். எனவே, நாட்டின் முன்னேற்றத்துக்கு மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

ஒன்றுபட்ட நாடு மட்டுமே முன்னேறி அதன் இலக்கை அடைய முடியும். படகில் அமர்ந்திருப்பவர்கள் ஒவ்வொருவரும் அதன் மீது அக்கறை காட்டுவது போன்று நாமும் ஒன்றுபட்டால் தான் முன்னேற்றத்தை காண முடியும். ஒற்றுமையின்மை புதிய பேரழிவுகளுக்கு நம்மை ஆளாக்கும். படேலின் கனவை நனவாக்கும் வகையில், நாட்டை கட்டி எழுப்ப ஒன்றுபட வேண்டும். அவரிடம் இருந்து பெற்ற உத்வேகத்தால், நாடு இன்று உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் ஏற்படக் கூடிய சவால்களை எதிர்கொள்ளும் திறன் கொண்டதாக உள்ளது.

 ‘ஒரே இந்தியா, மகத்தான இந்தியா’ என்று படேல் கனவு கண்டார். பெண்களுக்கு வாய்ப்பு, தலித், பழங்குடியினர், தாழ்த்தப்பட்டோர், ஒவ்வொரு குடிமகனும் பாகுபாடின்றி சமமாக உணரும் வகையில் அனைவருக்கும் வீடு, தண்ணீர், மின்சாரம் ஆகியன கொண்டதாக இந்தியா இருக்க வேண்டும் என்று விரும்பினார். இதைதான் நாடு இப்போது செய்து வருகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அமித்ஷா, ராகுல் உறுதி

குஜராத்தில் படேலின் பிரமாண்ட சிலை உள்ள கேவடியாவில் நடந்த ஒற்றுமை விழாவில் பிரதமர் மோடிக்கு பதிலாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று பங்கேற்றார். இந்த விழாவில் பேசிய அவர், ‘இந்தியாவின் ஒற்றுமையையும், நேர்மையையும் ஒருவராலும் அழிக்க முடியாது என்பதை  உலகுக்கு படேல் செய்தியாக தந்துள்ளார்,’ என்றார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘ஜனநாயகத்தின் அனைத்து தூண்களும் பலவீனம் அடைந்துள்ள இந்த நேரத்தில், படேலின் பங்களிப்பை நினைவு கூர்வது முக்கியம்’ ஜனநாயகத்தை பாதுகாப்பதே படேலுக்கு செய்யும் மரியாதை,’ என்று கூறியுள்ளார்.

Related Stories:

More