×

சாவர்க்கர் குறித்து சர்ச்சை கருத்து ஓவைசி மீது வழக்கு தொடர ஒன்றிய அரசு அனுமதி மறுப்பு

புதுடெல்லி: மகாத்மா காந்தியின் கொலையில் சாவர்க்கருக்கும் தொடர்பு இருப்பதாக ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் ஓவைசி கூறியதற்காக அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர ஒன்றிய அரசின் தலைமை வக்கீலான அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் மறுத்துள்ளார். ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்தவரும், சுதந்திர போராட்ட வீரருமான வீரசாவர்க்கரின் உருவப்படம் நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டுள்ளது குறித்து ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் ஓவைசி சமீபத்தில் விமர்சித்தார். ‘தேசப்பிதா மகாத்மா காந்தியின் கொலையில் சம்மந்தப்பட்டவர் என நீதிபதி கபூர் விசாரணை கமிட்டியால் குற்றம்சாட்டப்பட்டவர் சவார்க்கர்’ என ஓவைசி கூறினார்.   

இது குறித்து, அரசியல் நிபுணர்கள் குழு ஒன்று உச்ச நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி ஓவைசிக்கு கடிதம் எழுதியது. மேலும், ஓவைசி மீது நீதிமன்ற அவமதிப்பு தொடர ஒப்புதல் வழங்குமாறு அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபாலுக்கும் கடிதம் எழுதியது. இதற்கு பதில் அளித்துள்ள அட்டர்னி வேணுகோபால், ‘காந்தி கொலைக் குற்றத்தில் சாவர்க்கருக்கு தொடர்பில்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது உண்மைதான். ஆனாலும், 1966ல் அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி கபூர் விசாரணை குழு, ஓவைசியின் கருத்துக்கு ஒத்த அறிக்கையை சமர்பித்துள்ளது. காந்தி கொலைக்கு சாவர்க்கர் உடந்தையாக இருந்ததாக, உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி ஒருவர்   கூறியிருக்கும் நிலையில், ஓவைசி உச்ச நீதிமன்றத்தை அவமதித்து விட்டார் என கூறுவது கடினம். எனவே, வழக்கு தொடருவதை நிராகரிக்கிறேன்,’ என கூறி உள்ளார்.

Tags : Savarkar ,Owaisi , Savarkar, Controversial comment, case against Owaisi
× RELATED குடியுரிமை சட்டத்திற்கு தடை விதிக்க...