அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்திருந்தால் நான்தான் புரட்சித்தலைவர்னு எடப்பாடி சொல்லியிருப்பார்: முன்னாள் எம்பி அன்வர்ராஜா ஆடியோவால் பரபரப்பு

சாயல்குடி: அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்திருந்தால் நான்தான் புரட்சித்தலைவர் என எடப்பாடி சொல்லியிருப்பார் என்று அதிமுக முன்னாள் எம்.பி அன்வர்ராஜா ஒருமையில் விமர்சித்து பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ராமநாதபுரம் மாவட்ட அதிமுகவில் எம்ஜிஆர் காலம் முதல் மூத்த அரசியல்வாதியாக இருந்து வருபவர் அன்வர்ராஜா. முன்னாள் அமைச்சர், முன்னாள் எம்.பியான இவர், தற்போது அதிமுகவில் சிறுபான்மை பிரிவு மாநிலச் செயலாளராக இருக்கிறார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்லம் பிரிந்து தர்மயுத்தம் நடத்தியபோது, சசிகலா பக்கம் இருந்தவர், பிறகு சசிகலா சிறைக்கு போன பிறகு எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளராக மாறினார்.

பிறகு இருவரும் சேர்ந்த ஒருங்கிணைந்த அதிமுகவில் மூத்த தலைவராக இருந்து வருகிறார். இபிஎஸ் - ஓபிஎஸ் இரட்டை தலைமையிலான அதிமுகவில் இருந்தாலும் கூட சசிகலா ஆதரவு நிலைப்பாட்டை கொண்டவர். இதனால் இவரை தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்க கட்சி தலைமை தடை விதித்தது. இருந்தாலும் அதனை பொருட்படுத்தாமல் தொடர்ந்து பேசி வருகிறார். இதற்கிடையே நேற்று முன்தினம் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழாவிற்கு, தனியாக வந்து அன்வர்ராஜா மரியாதை செலுத்தினார். பின்னர் அவர், ‘‘சசிகலா அதிமுகவில் நுழைவது தொடர்பான பிரச்னை தற்போது எழுந்துள்ளது. சசிகலா உள்ளிட்ட அனைவரும் வேறுபாடுகளை மறந்து ஒற்றுமையாக இருக்க வேண்டும்.

சசிகலா உள்ளிட்ட யார் வேண்டுமானாலும் அதிமுக கொடியை பிடிக்கலாம்’’ என பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.  இந்நிலையில், புதுக்கோட்டையை சேர்ந்த அதிமுக தொண்டர் ஒருவரும், அன்வர்ராஜாவும் பேசி கொள்வது போன்ற ஆடியோ  சமூக வலைத்தளங்களில் நேற்று வைரலாகி உள்ளது.

புதுக்கோட்டை தொண்டர் பேசும்போது, ‘‘எடப்பாடி பழனிசாமி தரப்பைச் சேர்ந்த வாட்ஸ்அப் குரூப்களில் உங்களை (அன்வர் ராஜாவை) மிரட்ட சொல்லி பதிவு போடுகின்றனர். சாதி, மதம் கடந்து சின்னம்மா (சசிகலா) தலைமையில் ஒற்றுமையாக அனைவரும் இருக்க வேண்டும். ஒற்றுமையாக இருந்திருந்தால் ஆட்சியை பிடித்திருக்கலாம்’’ என்கிறார். இதற்கு பதிலளிக்கும் அன்வர்ராஜா, ‘‘அப்படி ஆட்சியை பிடித்திருந்தால் எடப்பாடி தன்னை புரட்சித்தலைவர் என்றல்லவா சொல்லியிருப்பார்.

இதுகுறித்து இன்று இரவு 8 மணிக்கு (நேற்று) நான் பங்கேற்கும் தனியார் தொலைக்காட்சி விவாதத்தை பாருங்கள்’’ என்கிறார். அந்த ஆடியோவில் எடப்பாடியை அன்வர்ராஜா ஒருமையில் விமர்சித்து பேசியிருந்தார். இது குறித்து அன்வர்ராஜா உதவியாளர் சிவாவிடம் கேட்டபோது, ‘‘அந்த ஆடியோவில் குரல் எடிட் பண்ணியது போல் உள்ளது. அமமுககாரர்கள் தான் இப்படி போட்டு விடுகின்றனர்’’ என்றார்.

Related Stories:

More