டாஸ்மாக் பார்கள் இன்று முதல் திறப்பு: கொரோனா தடுப்பு விதிகளை மீறினால் அபராதம்

சென்னை: கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில், புதிய தளர்வுகளுடன் ஊரடங்கை தமிழக அரசு நீட்டித்து வருகிறது. இந்தநிலையில், கடந்த மாதம் 23ம் தேதி, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஊரடங்கு குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நவம்பர் 15ம் தேதி வரை நீட்டித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். பண்டிகை காலத்தை முன்னிட்டு கடைகளுக்கான நேரக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது. திரையரங்குகளில் 100 சதவீத பர்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. டாஸ்மாக் கடைகளுடன் இணைந்த பார்கள் இன்று முதல் திறக்கப்படுகிறது.

மேலும், மாவட்டத்திற்குள்ளேயும், மாவட்டங்களுக்கு இடையேயும், மாநிலங்களுக்கிடையேயும் (கேரளா தவிர) சாதாரண மற்றும் குளிர் சாதன பஸ்களில் பயணிகள் 100 சதவிகித இருக்கைகளில் அமர்ந்து பயணிக்கலாம். தேவையான எண்ணிக்கையிலான பணியாளர்கள் / கலைஞர்களுடன் அனைத்து வகையான படப்பிடிப்புகளும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இன்று முதல் நடத்தலாம். படப்பிடிப்புகளில் பங்குபெறும் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். டாஸ்மாக் பார்கள் இன்று முதல் திறக்கப்படுவதை முன்னிட்டு, பார்களை முழுமையாக சுத்தப்படுத்தும் பணியில் ஊழியர்கள் நேற்று ஈடுபடுத்தப்பட்டனர். சமூக இடைவெளியுடன் இருக்கைகள் அமைக்கும் பணி நடைபெற்றது.

பார்களின் நுழைவு வாயில்களில் வாடிக்கையாளர்களின் விவரங்கள் சேகரித்து வைக்கப்படும். இதற்காக தனியாக குறிப்பேடும் இன்று முதல் பராமரிக்கப்பட உள்ளது. பார்களுக்கு உள்ளே வரும் அனைவருக்கும் வெப்ப அளவீட்டு சோதனை செய்யப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுவார்கள்.  முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். கொரோனா அறிகுறி தென்படும் நபர்கள் பார்களில் அனுமதிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பார்களில் உள்ள பணியாளர்கள் அனைவரும் கைகளில் கையுறை அணிந்து பணியில் ஈடுபட வேண்டும். மேலும், 55 வயதுக்கு மேற்பட்ட நபர்களை பணியில் ஈடுபடுத்தக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனா நோய் தொற்று விதிமீறல்களில் ஈடுபடுவர்கள் மீது அபராதம் விதிக்கப்படும் எனவும் அரசு எச்சரித்துள்ளது.

Related Stories:

More