×

தீபாவளிக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை நாளில் ஷாப்பிங் படுஜோர் தமிழக பஜார் வீதிகள் மக்கள் வெள்ளத்தில் திக்கு முக்காடியது: நவீன ரக பசுமை பட்டாசு; சுவீட் விற்பனை மும்முரம்

சென்னை: தீபாவளிக்கு முந்தைய கடைசி ஞாயிற்றுக்கிழமை என்பதாலும், இதனமான பருவசூழ் நிலவியதாலும், தமிழகம் முழுவதும் பஜார் வீதிகளில் தீபாவளி பொருட்கள் விற்பனை நேற்று களைக்கட்டியது. விதவிதமான புத்தாடை, பட்டாசு, சுவீட் வாங்க மக்கள் திரண்டதால் மாநிலம் முழுவதும் பஜார் வீதிகள் குலுங்கியது. தீபாவளி பண்டிகை வருகிற 4ம் தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. தீபாவளியை பொதுமக்கள் புத்தாடை உடுத்தியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடுவது வழக்கம். இந்த நிலையில் தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 2 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ளது. இருந்தாலும் பொதுமக்கள் தீபாவளி  ‘பர்சேசை’ கடந்த ஒரு மாதமாக செய்ய தொடங்கினர். இதனால், பஜார் வீதிகளில் கூட்டம் சற்று அதிகமாக காணப்பட்டு வந்தது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள். அது மட்டுமல்லாமல் தீபாவளிக்கு முந்தைய கடைசி ஞாயிற்றுக்கிழமை வேறு. மேலும் காலை முதலே தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சூரியனையே பார்க்க முடியாத அளவுக்கு வானம் மேகமூட்டத்துடன் குளிர்ச்சியான காற்றுடன் ரம்மியான பருவநிலை காணப்பட்டது. இதன் காரணமாக நேற்று காலை முதல் தீபாவளி இறுதி ஷாப்பிங்கில் மக்கள் மும்முரமாக ஈடுபட்டனர். இதனால், தமிழகம் முழுவதும் பஜார் வீதிகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ஒவ்வொருவரும் குடும்பம், குடும்பமாக வந்து கடைவீதிகளுக்கு பொருட்களை வாங்க வந்தனர். இதனால், நேரம் ஆக, ஆக மக்கள் வெள்ளத்தில் பஜார் வீதிகள் திக்குமுக்காடியதை காணமுடிந்தது. இரவு 10 மணி வரை இந்த கூட்டம் அப்படியே களையாமல் காணப்பட்டது.

சென்னையை பொறுத்தவரை   வர்த்தக பகுதியான சென்னை தி.நகர், புரசைவாக்கம், பழைய வண்ணாரப்பேட்டை, பிராட்வே, பாடி உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. சென்னை புறநகர்வாசிகள், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மற்றும் பக்கத்து மாநிலமான பாண்டிச்சேரி, ஆந்திரா, கர்நாடகா எல்லை பகுதிகளில் வசிக்கும் மக்களும் பொருட்களை வாங்க படையெடுத்து வந்தனர். அவர்கள் தங்களுக்கு தேவையான பேன்ட், சர்ட், சுடிதார், ஜீன்ஸ், சேலை, வேஷ்டி உள்ளிட்ட துணிமணிகளை தேர்ந்தெடுத்தனர். மாலை 5 மணிக்கு மேல் தி.நகர், புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் எங்கு பார்த்தாலும் மக்கள் தலைகளாக காட்சியளித்தது.

தலை தீபாவளி கொண்டாடும் தம்பதியர்களின் உறவினர்கள் அதிக அளவில் புதிய துணிகளை வாங்கிய காட்சியை காண முடிந்தது. ஒரே நேரத்தில் கட்டுக்கடங்காத கூட்டம் திரண்டதால் தி.நகர், புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகள் மக்கள் வெள்ளத்தில் குலுங்கின. மேலும் பஜார் வீதிகளில் மாஸ்க் அணியாமல் ஜாலியாக உலா வந்தவர்கள் போலீசார் எச்சரிக்கை செய்து திருப்பி அனுப்பப்பட்டனர். மேலும் மாநகராட்சி மற்றும் சுகாதார துறை சார்பில் மாஸ்க் அணியாமல் வந்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. ஜவுளி, நகை, பாத்திர கடைகளில் பொருட்களை வாங்க வருபவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே கடைகளுக்குள் அனுமதிக்கப்பட்ட காட்சியை காணமுடிந்தது.

பொதுமக்கள் அலைமோதியதால் பாதுகாப்பு மற்றும் வழிப்பறி, திருட்டு சம்பவங்களை தடுக்க தி.நகர், புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2000 போலீசார் பாதுகாப்பு பணிக்காக ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். அவர்கள் ஆங்காங்கே உயர் கோபுரங்கள் அமைத்து பைனாகுலர் மூலம் கூட்டத்தை கண்காணித்தனர். இதுதவிர, சாதாரண உடை அணிந்த போலீசார் மக்களோடு, மக்களாக சென்றவாறு பாதுகாப்பு அளித்தனர். ஒலிபெருக்கி மூலம் அவ்வப்போது பொதுமக்களுக்கு விழிப்புணர்வு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தி.நகரில் மட்டும் கண்காணிப்புக்காக 700க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. மேலும் சாலையின் இருபுறமும் கயிறுகளை கட்டி கூட்டத்தை ஒழுங்குப்படுத்தினர். தீபாவளி பொருட்கள் வாங்க இன்றும், நாளையும், நாளை மறுநாளும் இன்னும் கூட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதனால், தமிழகம் முழுவதும் பஜார் வீதிகள் மக்கள் வெள்ளத்தில் திக்குமுக்காட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் பாதுகாப்பையும்  மேலும் பலப்படுத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் தீவுத்திடல், ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானம் பகுதிகளில் பிரமாண்ட பட்டாசு சந்தைகள் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு நேற்று முதல் விற்பனை சூடுபிடித்தது. மேலும் தீபாவளிக்காக பல்வேறு முக்கிய வீதிகளில் பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டிருந்தது. அங்கும் மக்கள் பட்டாசுகளை தேர்ந்தெடுத்து வாங்கி சென்றனர். இதனால், பட்டாசு விற்பனை நேற்று விறுவிறுப்படைந்தது. சுவிட் கடைகள், தீபாவளி பலகாரங்கள் விற்பனை செய்யும் இடங்களில் ஆர்டர் கொடுப்பதற்காக நேற்று நிறைய பேர் வந்திருந்தனர். அவர்கள் தங்களுக்கு தேவையான உணவு வகைகளை ஆர்டர் கொடுத்து சென்ற காட்சியை காண முடிந்தது.

Tags : Deepavali ,Badujor Tamil Nadu Bazaar , Deepavali, Sunday, Shopping, Tamil Nadu Bazaar Streets
× RELATED தீபாவளி ஸ்பெஷல் கிராமத்து மட்டன் வறுவல்!