பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்வு எதிரொலி அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்க தொடங்கியது: தீபாவளிக்கு பிறகு இன்னும் விலை அதிகரிக்க வாய்ப்பு

சென்னை: பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத உயர்வை தொடர்ந்து அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்க தொடங்கியுள்ளது. தீபாவளிக்கு பிறகு இன்னும் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் கூறியுள்ளனர். பெட்ரோல், டீசல் விலை கடந்த ஆகஸ்ட் மாதம் வரை வரலாறு காணாத உச்சத்தில் இருந்தது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். குறிப்பாக தினசரி கூலி வேலை பார்ப்பவர்கள் தங்களின் சம்பளத்தில் பெரும் பகுதியை மோட்டார் சைக்கிள் போன்ற வானங்களுக்கே கொடுக்கும் நிலை ஏற்பட்டது. மக்கள் படும் கஷ்டத்தை தொடர்ந்து தமிழக அரசு பெட்ரோல் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்தது. இதன் காரணமாக,ரூ.102க்கு விற்பனையான ஒரு லிட்டர் பெட்ரோல்ரூ.100க்கு கீழ் வந்தது. இது பொதுமக்களுக்கு பெரும் ஆறுதலை ஏற்படுத்தியிருந்தது.

அதே நேரத்தில் டீசல் விலையும் சற்று குறைந்து காணப்பட்டது. இந்நிலையில் கடந்த மாத இறுதியில் இருந்து மீண்டும் பெட்ரோல், டீசல் விலை நாள் தோறும் என்ற அடிப்படையில் உயர்ந்து கொண்டே போனது. இதனால் தினசரி பெட்ரோல், டீசல் விலை உயர்வு புதிய உச்சத்தை தாண்டி அதிர்ச்சி வைத்தியம் காட்டியது. அதாவது, ஒரு நாளைக்கு 30 காசு என்ற அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே போனது. நேற்றும் பெட்ரோல் லிட்டருக்கு 30 காசுகள் அதிகரித்துரூ.106.04க்கும், டீசல் லிட்டருக்கு 33 காசுகள் அதிகரித்துரூ.102.25க்கும் விற்கப்பட்து குறிப்பிட்டத்தக்கது. விலை உயர்வால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெரும்பாலானவர்கள் விலை உயர்வை ஈடுகட்டும் வகையில் மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களை தவிர்த்து பஸ், ரயில்களில் தங்கள் பணியை தொடர்ந்தனர். இதனால், பஸ், ரயில்களில் வழக்கத்தை விட ஒரு மாதமாக அதிகரித்து காணப்பட்டு வருகிறது. வரும் நாட்களில் இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் டீசல் விலை உயர்வால் சரக்கு வாகனங்களின் வாடகை கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. பருப்பு, காய்கறியில் இருந்து கட்டுமான பொருட்கள் விலை உயர தொடங்கியுள்ளது. இன்னும் வரும் நாட்களில் விலை உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் கொரோனா ஊடரங்குக்கு முன்பு வரைரூ.80 முதல்ரூ.90 வரை தான் விற்பனையானது.

இப்போது இதுரூ.150 முதல் 180 வரை தயாரிப்பு வாரியாக விலை உயர்ந்துள்ளது. துவரம் பருப்புரூ.80 முதல்ரூ.100 வரை விற்பனையானது, தற்போதுரூ.130 முதல்ரூ.160 வரை விற்கப்படுகிறது. இதே போல அரிசி சோப்பு மற்றும் பிற மளிகை பொருட்களும் விலையும் சற்று அதிகரித்துள்ளது. தற்போது தீபாவளி பண்டிகை என்பதால் ஏற்கனவே அதிக அளவில் பொருட்களை வாங்கி வியாபாரிகள் இருப்பு வைத்துள்ளனர். இந்த பொருட்கள் அனைத்தும் விற்று தீர்ந்த பின்னர், புதிதாக பொருட்களை வாங்கும் போது விலை உயர்வு இன்னும் அதிகரிக்கும் என்று மளிகை கடை நடத்துபவர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து இது குறித்து சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட் மொத்த வியாபாரிகள் சங்க ஆலோசகர் சவுந்தரராஜன் கூறியதாவது: பெங்களூரில் இருந்து 50 கிலோ  காய்கறிகளுக்கு வாடகை கட்டணமாகரூ.60 என்பது இருந்தது. டீசல் விலை உயர்வால் இந்த கட்டண உயர்வு என்பதுரூ.80 ஆக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக காய்கறி விலையும் உயர்ந்துள்ளது. இதனால் இஞ்சிரூ.50க்கு விற்றதுரூ.60,70 ஆகவும், கேரட்ரூ.40லிருந்துரூ.60, பட்டாணிரூ.100லிருந்துரூ.130 ஆகவும், பல்லாரிரூ.20 லிருந்துரூ.30 ஆகவும் விலை உயர்ந்துள்ளது.  தற்போது தீபாவளி பண்டிகை நேரமாக இருப்பதால் மக்கள் புத்தாடை உள்ளிட்ட பொருட்களை வாங்குவதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இதனால், தற்போது காய்கறி வியாபாரம் மந்தமாக உள்ளது. தீபாவளிக்கு பிறகு காய்கறி விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார். கோயம்பேடு மொத்த மார்க்கெட்டில் தான் இந்த விலை உயர்வு. இதனை வாங்கி சில்லறையில் விற்பவர்கள் கிலோவுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை அதிகமாக விற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

* ஒரு லிட்டர் சமையல் எண்ணெய்ரூ.90ல் இருந்து 150க்கு மேல் விற்பனை

* துவரம் பருப்புரூ.100ல் இருந்துரூ.160 ஆக உயர்ந்துள்ளது.

* இஞ்சி ரூ.50ல் இருந்துரூ.70 ஆக உயர்வு

* கேரட்ரூ.40லிருந்து ரூ.60 அதிகரிப்பு

* பட்டாணிரூ.100லிருந்து ரூ.130 ஆக உயர்வு

Related Stories: