×

டெல்டா, 5 மாவட்டத்துக்கு ஆரஞ்சு அலர்ட்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: இலங்கை கடலோரப் பகுதி மற்றும் அதை ஒட்டிய தென்தமிழக கடலோரப் பகுதியில் நீடிக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக டெல்டா மாவட்டங்கள் மற்றும்  5 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என்பதால், அந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு அறிவிப்பு: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதை அடுத்து, வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இதனால், பல்வேறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

அதிகபட்சமாக நேற்று பரங்கிப்பேட்டை, ராமநாதபுரம், மயிலாடுதுறை, திருவாரூர் பகுதிகளில் 50 மிமீ மழை பெய்துள்ளது.  இதுதவிர, டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கடலூர் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மழை பெய்துள்ளது. சென்னையிலும் நகரின் பல இடங்களில் நேற்று காலையில் இருந்தே மழை பெய்தது. இலங்கை கடலோரப் பகுதி மற்றும் தென்தமிழக கடலோரப்பகுதியில் நீடித்து வரும் குறைந்த காற்றழுத்த  தாழ்வுப் பகுதியின் காரணமாகவும் டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, கடலூர், தூத்துக்குடி மாவட்டங்களில் 2ம் தேதி வரை மிக கனமழை பெய்யும் என்பதால் அந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது.

  கன்னியாகுரி, புதுச்சேரி, விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும். பிற மாவட்டங்களில் பெரும்பாலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும். மேலும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 3ம் தேதி மற்றும் 4ம் தேதிகளில் மிக கனமழை பெய்யும் என்பதால்   அந்த மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது. சென்னையில் பொதுவாக மேகமூட்டம் காணப்பட்டாலும் நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. குமரிக் கடல், மன்னார் வளைகுடா மற்றும் இலங்கை கடற்பகுதியை ஒட்டிய தென் மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 50 கிமீ வேகத்தில் வீசும்.அதனால் அந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


Tags : Orange ,Delta ,District , Delta, Orange Alert, Meteorological Center
× RELATED தென், டெல்டா மாவட்டங்களில் 15ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு