×

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் ரஜினியுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு: உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்

சென்னை: சென்னை, காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த்தை, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். டெல்லியில் கடந்த மாதம் 25ம் தேதி நடைபெற்ற 67வது, தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் நடிகர் ரஜினிகாந்துக்கு கலையுலகின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. பின்னர், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரை நேரில் சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து பெற்றார். விருது பெற்ற ரஜினிகாந்துக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்தனர். இதையடுத்து நடிகர் ரஜினிகாந்த் சென்னை திரும்பினார்.

இந்தநிலையில் அவருக்கு கடந்த 28ம் தேதி மாலை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அன்றைய தினம் இரவு அவர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார். நடிகர் ரஜினிகாந்த் திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களில் நடிகர் ரஜினிகாந்த் விரைவில் குணமடைந்து வீடுதிரும்ப வேண்டும் என அவரது ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
இந்தநிலையில், வழக்கமான பரிசோதனைக்காகக் காவேரி மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டதாக அவரின் மனைவி லதா ரஜினிகாந்த் தெரிவித்தார்.

இதையடுத்து நண்பர் ரஜினிகாந்த் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இதேபோல், சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்களும் நடிகர் ரஜினிகாந்த் குணமடைய வாழ்த்து தெரிவித்தனர்.இதைத்தொடர்ந்து கடந்த 29ம் தேதி ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், ‘கரோடிட் அர்ட்டரி வேஸ்குலரைசேஷன் சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது. ரஜினிகாந்த் உடல்நிலை தேறி வருகிறார். அவர் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்புவார். என அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.   

இந்தநிலையில், காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் ரஜினிகாந்தை, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். பின்னர், ரஜினி விரைவில் குணமடைந்து வீடு திரும்ப முதல்வர் வாழ்த்து கூறினார்.

Tags : BC ,Rajini ,Stalin , Hospital, Treatment, Actor Rajini, Chief Minister, MK Stalin
× RELATED இந்த தேர்தல் மூலம் யார் சரியானவர்,...