×

அறந்தாங்கி பகுதியில் ரசாயன உரம் பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை: விவசாயிகள் வலியுறுத்தல்

அறந்தாங்கி: அறந்தாங்கி பகுதியில் சாகுபடிக்கு தேவையான ரசாயன உரங்கள் விவசாயிகளுக்கு போதிய அளவு கிடைக்காமல் சில மொத்த வியாபாரிகள் செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்துவதாக விவசாயிகள் புகார் கூறியுள்ளனர். புதுக்கோட்டைமாவட்டம் அறந்தாங்கி, ஆவுடையார்கோவில் மற்றும் மணமேல்குடி வட்டங்களில் சுமார் 80 ஆயிரத்திற்கும் அதிகமான ஏக்கரில் விவசாயிகள் சம்பா சாகுபடி செய்து வருகின்றனர். நேரடி நெல் விதைப்பு மற்றும் நடவு முறையில் விவசாயிகள் சாகுபடி செய்துள்ள நெற்பயிருக்கு தற்போது யூரியா, டி.ஏ.பி, காம்ப்ளக்ஸ் போன்ற உரங்களை வயலுக்கு இட்டு வருகின்றனர். அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி பகுதிகளில் சாகுபடிக்கு தேவையான உரத்திற்கு ஏற்பட்டுள்ள கிராக்கியை பயன்படுத்தி தனியார் உர விற்பனையாளர்கள் சிலர் யூரியா உள்ளிட்ட உரங்களை வாங்க வரும் விவசாயிகளை கட்டாயப்படுத்தி, பயிர் ஊக்கிகளை வாங்கினால்தான் உரம் தருவேன் எனக்கூறி பயிர் ஊக்கிகளை விற்பனை செய்து வருகின்றனர்.

அறந்தாங்கி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஒரு சில கடைகளை தவிர மற்ற கடைகளில் விதிகளை மீறி மாவட்ட கலெக்டரின் உத்தரவை மீறி அரசு நிர்ணயித்துள்ள விலையை விட கூடுதல் விலைக்கு உரங்களை விற்பனை செய்து வருகின்றனர். தற்போது தொடர் மழை பெய்து வருவதாலும், நெற்பயிர் விதைப்பு செய்து 50 நாட்களை கடந்துள்ள நிலையில் 2வது உரமிட விவசாயிகள் உரங்களை வாங்க உரக்கடைகளுக்கு படை எடுத்துள்ள நிலையில் பல உர வியாபாரிகள் உர மூட்டைகளை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். இது குறித்து விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள தனியார் உரக்கடைகளுக்கு சென்று உர மூட்டைகளை கேட்கும்போது, அவர்கள் விவசாயிகளிடம் யூரியா உள்ளிட்ட உரம் தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவை விட குறைவாகவே தங்களுக்கு வழங்கப்பட்டதால், தற்போது உரம் இருப்பில் இல்லை எனக் கூறி வருகிறார்கள்.

ஆனால் சில வியாபாரிகள் உரம் பில்கள் இல்லாமல், அரசுக்கு தெரியாமல் பல்வேறு குடோன்களில் பதுக்கி வைத்து தங்களுக்கு வேண்டிய விவசாயிகளுக்கும், கூடுதல் விலை கொடுத்து வாங்க தயாராக உள்ள விவசாயிகளுக்கும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். அதேபோல தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் குறைவான உரமே இருப்பு உள்ளதால், அங்கும் உரம் வாங்க முடியவில்லை. தற்போது பயிருக்கு தேவையான உரத்தை இடாவிட்டால், பயிர்கள் வாளிப்பாக வளராது. இதனால் மகசூல் பாதிக்கப்படும். எனவே சாகுபடிக்கு தேவையான உரத்தை தடையின்றி விவசாயிகளுக்கு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கூறினர். எனவே அறந்தாங்கி பகுதியில் சாகுபடிக்கு தேவையான ரசாயன உரங்கள் தடையின்றி கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாகும்.


Tags : Rutthangi , Aranthangi, farmers
× RELATED அறந்தாங்கி நகரில் இயங்காமல் காட்சி...