×

தொடர் மழையால் விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை: தருவைகுளத்தில் மீன்கள் விலை ஏற்றம்: சீலா ரூ.500லிருந்து 600வரை விற்பனை

குளத்தூர்: தொடர் மழையால் விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாததால் தருவைகுளத்தில் மீன்கள் விலை ஏற்றம் காணப்பட்டது. வடகிழக்கு பருவமழை துவக்கம், கடல் பகுதியில் பலத்த காற்று வீசியதால் குளத்தூர் அருகேயுள்ள தருவைகுளத்தில் விசைப்படகுகள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. நாட்டுப்படகு மீன்கள் மட்டுமே கடலுக்கு சென்றிருந்தனர். ஊளி, சின்னசீலா, கருப்பு களிங்கன் முறல், வாலமுறல், பச்சை களிங்கன் முறல், ஐலெஸ், சடையான், பாறை, கேறை போன்ற மீன்களுடன் நாட்டுப்படகு மீனவர்கள் கரை திரும்பினர். இதில் ஊளி மீன்வரத்து அதிகரித்து காணப்பட்டது. தூத்துக்குடி மீன்பிடி துறைமுக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் அங்கு செல்லும் மீன்வியாபாரிகள் பெரும்பாலோனோர் தருவைகுளம் ஏலக்கூடத்திற்கு மீன்களை ஏலம் எடுக்க வந்தனர்.

இதனால் நேற்று தருவைகுளம் ஏலக்கூடத்தில் மீன்களை ஏலம் எடுப்பதில் வியாபாரிகளுக்கிடையே போட்டி காணப்பட்டது. கடந்த வாரங்களில் இருந்த மீன்களின் விலையிலிருந்து கிலோவுக்கு ரூ.30லிருந்து 50வரை உயர்ந்து காணப்பட்டது. ஊளி மீன் கிலோ ரூ.250லிருந்து 300வரை ஏலம் போனது. சீலா ரூ.500லிருந்து 600வரையும், முறல்வகை மீன்கள் ரூ.250லிருந்து 350வரையும், கேறை, சூறை மீன்கள் ரூ.150க்கு விற்பனையானது.

இதுகுறித்து மீன்வியாபாரி ராஜேந்திரன் கூறியதாவது, கடந்த இருவாரங்களுக்கு முன்பு புரட்டாசி மாதம் இந்துக்கள் அதிகம் அசைவ உணவுகளை விரும்பாததால் மீன்கள் விலை குறைந்ததுடன் வியாபாரமும் டல்லடித்தது. கடந்த ஒருவாரமாக மீன்கள் வியாபாரம் பரவலாக அதிகரித்து உள்ளது. மேலும் இரு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் விசைப்படகுகள் கடலுக்குள் செல்லவில்லை.

இதனால் நாட்டுப்படகு மீனவர்கள் கொண்டு வரும் மீன்களுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகளிடையே கடும் கிராக்கி இருந்து வருகிறது. கடந்த வாரங்களில் இருந்த மீன்களின் விலையிலிருந்து சற்று உயர்ந்துள்ளது. மேலும் வரும் நாட்களில் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடித்தொழிலுக்கு சென்று மீன்களின் வரத்தை பொருத்து மீன்கள் விலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது என கூறினார்.

Tags : Daruvaikulam ,Sila , Continuous rain, fish
× RELATED தருவைகுளத்தில் திருப்பயணிகள் இல்லம் திறப்பு