ஆர்.கே.நகர் கிழக்குப்பகுதி திமுக பொறுப்பாளர் மரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

தண்டையார்பேட்டை: சென்னை ஆர்.கே.நகர் கிழக்குப்பகுதியை சேர்ந்தவர் சுந்தரராஜன் (67). ஆர்.கே.நகர் கிழக்குப்பகுதி திமுக பொறுப்பாளராக இருந்து வந்தார். கடந்த 26ம் தேதி பாரிமுனை ராஜாஜி சாலையில்  பைக்கில் சென்றபோது, சுந்தரராஜனுக்கு திடீரென உயர்ரத்த அழுத்தம் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். இதனால் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

பின்னர், மேல்சிகிச்சைக்காக ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. நேற்றிரவு சிகிச்சை பலனின்றி இறந்தார். இவர், ஆர்.கே.நகர் பகுதி தலைவராகவும், செயலாளராகவும் இருந்துள்ளார். இவருக்கு நாகேஸ்வரி என்ற மனைவியும், பிரபாகரன், சத்தியநாராயணன் என்ற 2 மகன்கள் உள்ளனர். சுந்தரராஜனின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. சுந்தரராஜனின் இறப்பு செய்தி அறிந்ததும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தண்டையார்பேட்டை தாண்டவராயன் கிராமணி தெருவில் உள்ள அவரது இல்லத்துக்கு சென்றார்.

பின்னர், அவரது உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அதன்பிறகு அவரது குடும்பத்துக்கு ஆறுதல் கூறினார். இதைத்தொடர்ந்து அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, திமுக அமைப்பு செயலாளர் அன்பகம் கலை, வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, மாவட்ட பொறுப்பாளர் இளைய அருணா,  எம்எல்ஏக்கள்  எபினேசர், ஆர்.டி.சேகர், ஐட்ரீம் மூர்த்தி, வடசென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர்  எம்.எஸ்.திரவியம், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன் மற்றும் திமுக நிர்வாகிகள், பகுதி செயலாளர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.  சுந்தரராஜன்  உடல் இன்று மாலை காசிமேடு பகுதியில் உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்யப்படுகிறது.

Related Stories:

More