குலசேகரத்தில் பரபரப்பு தண்ணீர் கலந்த பெட்ரோல் விற்ற பங்க் முற்றுகை: வாகனங்கள் நடுவழியில் நின்றன, பணம் வாபஸ்

குலசேகரம்: குலசேகரத்தில் தண்ணீர் கலந்த பெட்ரோல் விற்பனை செய்த பல்க்கை வாடிக்கையாளர்கள் முற்றுகையிட்டனர். இதையடுத்து விற்பனை நிறுத்தப்பட்டு, அவர்களுக்கு பணம் திரும்ப வழங்கப்பட்டது. குலசேகரம்  கல்லடிமாமூடு பகுதியில் பெட்ரோல் பங்க் ஒன்று இயங்கி வருகிறது. இங்கு நேற்று காலை பெட்ரோல் போட கார், ஆட்டோ என ஏராளமான வாகனங்கள் வந்தன. பெட்ரோல்  நிரப்பி சிறிது தூரம் சென்றதும் வாகனங்களின் இன்ஜின் பழுதாகி நின்றது.  இதையடுத்து சிலர் தங்களது வாகனங்களை தள்ளி சென்றனர். மேலும் சிலர்  இன்ஜினில் பிரச்னையா? என்று சந்ேதகம் ஏற்பட்டு மெக்கானிக்கை வரவழைத்து  சோதனை நடத்தினர். அப்போது பெட்ரோலில் தண்ணீர் கலந்திருந்தது தெரியவந்தது.  இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து வாகன  ஓட்டிகள் அந்த பங்க் ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டனர். தொடர்ந்து  வாடிக்கையாளர் ஒருவர் பாட்டிலில் பெட்ரோல் வாங்கி பார்த்தார். அப்போது  அதில், பாதி பெட்ரோலும் மீதி தண்ணீரும் கலந்து இருந்தது. இதனால் வாகன  ஓட்டிகள் மேலும் கடுப்பாகினர். தொடர்ந்து ஊழியர்களிடம் காரசார  வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் பல்கை முற்றுகையிட்டனர். பங்க்கில் பெட்ரோல் வைத்திருக்கும்  டேங்கில் ஓட்டை ஏற்பட்டு மழை தண்ணீர் புகுந்திருக்கலாம் எனக்கூறப்படுகிறது. இதையடுத்து பெட்ரோல் விற்பனை நிறுத்தப்பட்டு, வாடிக்கையாளர்களுக்கு பணம் திரும்ப வழங்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Related Stories: