×

முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் உயர்ந்து வந்ததால் தமிழக அதிகாரிகள் தான் 2 மதகுகளை திறந்தார்கள்: கேரள அமைச்சர் உடனிருந்தது குறித்து அமைச்சர் துரைமுருகன் விளக்கம்

சென்னை: முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்து வந்ததால், இரண்டு மதகுகளை  தமிழக நீர்வளத்துறை பொறியாளர்களால்தான் திறக்கப்பட்டது. மதகு  திறக்கப்படும்போது கேரள அமைச்சர், அதிகாரிகள் உடனிருந்து பார்வையிட்டார்கள்  என்று அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: முல்லைப் பெரியாறு அணை கேரள கட்டுப்பாட்டில் உள்ளதுபோல ஒரு தோற்றத்தை ஒரு சில ஊடகங்கள் ஏற்படுத்தி உள்ளது உண்மைக்கு புறம்பானதாகும். முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை கணக்கில் கொண்டு, 28.10.2021 காலை, நீர்மட்டம் உயர்ந்து வந்ததால் அணையின் இரண்டு மதகுகளை திறக்க, மதுரை மண்டலம் நீர்வளத்துறை முடிவெடுத்து, அன்று காலை தமிழக நீர்வளத்துறை பொறியாளர்களால் திறக்கப்பட்டது. இதுகுறித்து, நிலையான வழிகாட்டுதலின்படி, கேரள அரசின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டது. மதகுகள் திறக்கப்படும்போது, கேரள மாநில நீர்வளத்துறை அமைச்சரும் மற்றும் சில அதிகாரிகளும் உடனிருந்து பார்வையிட்டார்கள்.

உண்மை நிலை இவ்வாறு இருக்க, ஏதோ கேரள அரசின் அதிகாரிகள்தான் அணை மதகுகளை திறந்தார்கள் என்று சில ஊடகங்களில் செய்தி வெளியிட்டிருப்பது மிகத்தவறானது. இதுபோன்ற தவறான செய்தியை தெரிவித்திருப்பது ஏதோ உள்நோக்கமுள்ளதுபோல் தோன்றுகிறது. இது இரு மாநிலங்களின் நலன் கருதி தவிர்க்கப்பட வேண்டும். தமிழ்நாட்டின் நீர்வளத் துறை, உச்ச நீதிமன்றத்தின் ஆணையின்படி மத்திய நீர்வள குழுமம் அதன் ஒப்புதலில் தெரிவித்த மாதவாரியான நிர்ணயிக்கப்பட்ட நீரின் அளவின்படி, அணையின் நீர்மட்டத்தை முறைப்படுத்தி வருகிறது. இதன்படி, நவம்பர் 30ம் தேதி முதல் அனுமதிக்கப்பட்ட 142 அடி அளவிற்கு அணையில் நீர்வரத்தை பொறுத்து நீர் தேக்கி வைக்கப்படும் என்ற உறுதிப்பாட்டில் எவ்வித ஐயப்பாடும் இல்லை. தமிழ்நாடு அரசு முல்லைப் பெரியாறு அணையை கண்காணித்தும், பராமரித்தும், இயக்கியும் வருகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Mullaiperiyaru dam ,Tamil Nadu ,Minister ,Duraimurugan ,Kerala , Mullaiperiyaru, Dam, Water Level, Tamil Nadu, Thuraimurugan
× RELATED தமிழ்நாடு காவல்துறையின் ஃபேஸ்...