×

ரூ.100 கோடியில் நீலக்கொடி கடற்கரை சான்று திட்டம் 10 கடற்கரைகளில் செயல்படுத்த அனுமதி

சென்னை: தமிழகத்தில் நீலக்கொடி கடற்கரை சான்றிதழ் திட்டத்தினை (ப்ளூ பிளாக் ப்ரோகிராம்) ₹100 கோடி செலவில் 10 கடற்கரைகளில் செயல்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசின் முதன்மை செயலாளர் சுப்ரியா சாகு பிறப்பித்துள்ள அரசாணை: நீலக்கொடி கடற்கரை சான்றிதழ் திட்டம் என்பது கடற்கரைகள் மற்றும் மெரினாக்களுக்கான உலகப்புகழ்பெற்ற சுற்றுச்சூழல் சான்றிதழ் ஆகும். இது டென்மார்க்கை தலைமையிடமாகக் கொண்ட எப்.இ.இ (சுற்றுச்சுழல் கல்விக்கான அறக்கட்டளை)  என்ற சர்வதேச, அரசு சாரா, லாபநோக்கமற்ற நிறுவனம் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2021-22ம் ஆண்டுக்கான பட்ஜெட் உரையின் போது (3.9.21) பீம்ஸ் திட்டத்தின் கீழ் 10 கடற்ரைகள் நீலக்கொடி சான்றிதழுக்காக எடுத்துக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது. மேலும் செங்கல்பட்டு, கோவளம் கடற்கரை பைலட் பீச்சாக தேர்வு செய்யப்பட்டது. இதற்கான சான்று கடந்த மாதம் வழங்கப்பட்டது.

இந்த அறிவின்படி பீம்ஸ் திட்டத்தின் படி கடலோர நீர் மற்றும் கடற்கரைகளில் மாசு ஏற்படுவதை தடுப்பது, கடற்கரை வசதிகளின் நிலையான வளர்ச்சியை ஊக்குவித்தல், கடலோர சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் இயற்கை வளங்களை பாதுகாத்தல், உயர்தரமான தூய்மையை பேணுவதற்கு ஊக்குவித்தல், சுற்றுச்சூழல் விதிமுறைகளுக்கு இணங்க கடற்கரைகளுக்கு செல்பவர்களுக்கான சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு, சுற்றுலா மற்றும் பொழுதுபோக்குகளை இயற்கையுடன் இணக்கமாக ஊக்குவித்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும்.  இத்திட்டம் தமிழகத்தில் 10 கடற்கரைகளில் ₹100 கோடி செலவில் செயல்படுத்தப்படும். தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம்/ ஒருங்கிணைந்த கடற்கரை மேலாண்மை சங்கம்/ சுற்றுச்சூழல்துறை போன்றவற்றின் நிதியுதவியுடன் மொத்தம் ₹100 கோடி செலவில் அடுத்த 5 ஆண்டுகளில் கடற்கரை சுற்றுச்சூழல் மற்றும் அழகியல் மேலாண்மை அமைப்பின் திட்டத்தின் கீழ் 10 கடற்கரைகளுக்கு அரசு நிர்வாக அனுமதி வழங்கியுள்ளது.


Tags : Rs 100 crore, blue flag, beach certificate, beach
× RELATED மாமல்லபுரம் அருகே ₹4,276.44 கோடியில்...