×

பொது சொத்துகளை சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டு அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன் மீதான வழக்கு ரத்து: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: பொது சொத்துகளை சேதப்படுத்தியதாக தற்போதைய தமிழக ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  சென்னை மாநகராட்சியின் 131வது வார்டுக்கு கடந்த 2005 ஏப்ரல் 19ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. அப்போது கே.கே.நகரில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடிக்குள் அத்துமீறி நுழைந்து, தேர்தல் அலுவலரிடம் இருந்து முத்திரையை பறித்துச் சென்றதாகவும், அதை தட்டிக்கேட்ட தன்னை துரத்தியதுடன் காரை சேதப்படுத்தி பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாகவும் கூறி அதிமுக பிரமுகர் சந்தோஷ் என்பவர் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் கே.கே.நகர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு சென்னை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட திமுகவினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு நீதிபதி நிர்மல்குமார் முன் விசாரணைக்கு வந்தபோது, அரசியல் முன் விரோதம் காரணமாக இந்த பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், காவல் துறையினர் முறையான புலன் விசாரணையை நடத்தவில்லை எனவும், 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் துவங்கப்படவில்லை எனவும் மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. அப்போது, மனுக்கள் மீது மனுக்களை தாக்கல் செய்து விசாரணையை தாமதப்படுத்தியதாக காவல் துறை தரப்பில் வாதிடப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கார் பெட்ரோல் ஊற்றி தீவைக்கப்பட்டதா என்பது குறித்து சேத மதிப்பீட்டு அறிக்கையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. 10 ஆண்டுகளுக்கு மேலாக வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை. எனவே, இந்த வழக்கு ரத்து செய்யப்படுகிறது என்று தீர்ப்பளித்தார்.

Tags : Thamo Anparasan ,Ma Subramaniam ,ICC , Public Property, Charge, Thamo Anparasan, Ma Subramaniam, Case
× RELATED காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக...