கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு ஜெயலலிதாவின் கார் டிரைவரிடம் தனிப்படை போலீசார் விசாரணை

ஊட்டி: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் ஐயப்பனிடம் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். கொடநாடு எஸ்டேட்டில் நடந்த காவலாளி கொலை, கொள்ளை வழக்கில் தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். முக்கிய குற்றவாளியான சயானிடம் கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து சேலம் ஆத்தூரை சேர்ந்த கனகராஜின் அண்ணன் தனபால், கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன், கனகராஜின் மனைவி, மைத்துனர், கனகராஜின் நண்பர்கள், கொலை வழக்கின் முக்கிய குற்றவாளிகளான ஜம்சீர் அலி, மனோஜ்சாமி, சந்தோஷ்சாமி உட்பட 6 பேர், 30க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் இதுவரை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், கொடநாடு கொலை வழக்கின் முக்கிய குற்றவாளிகளில் ஒருவராக கருதப்படும் சாலை விபத்தில் உயிரிழந்த ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜின் நண்பரும், ஜெயலலிதாவின் மற்றொரு கார் டிரைவருமான ஐயப்பனிடம் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். நீலகிரி எஸ்பி ஆசிஷ் ராவத் தலைமையில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதாக தெரிகிறது. இந்த விசாரணையில் அவர் பல தகவல்களை தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.

கனகராஜின் செல்போன் தீயில் போட்டு எரிப்பு: தனபால் திடுக் தகவல்

கொடநாடு கொலை வழக்கு தொடர்பாக கனகராஜின் அண்ணன் தனபால் மற்றும் அவரது உறவினர் ரமேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். சாட்சியங்களை கலைத்ததாகவும், ஆதாரங்களை அழித்ததாகவும் கைதாகியுள்ள அவர்கள் 2 பேரையும் 5 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதையடுத்து அவர்களிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள். போலீஸ் விசாரணையின்போது கனகராஜின் செல்போனில் இருந்த பதிவுகளை அழித்தது மட்டுமின்றி, செல்போனை தீயில் போட்டு எரித்து விட்டதாகவும் தனபால் தெரிவித்துள்ளார்.

சாட்சியங்களை ஏன் கலைத்தீர்கள்?  தடயங்களை எதற்காக அழித்தீர்கள்? என இருவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கனகராஜின் செல்போனில் தொடர்பு கொண்ட நபர்கள் யார் என்றும், அவர்களின் விவரங்கள் குறித்தும் போலீசார் துருவி துருவி விசாரித்து வருகின்றனர். விசாரணை நடக்கும் இடம் மற்றும் விசாரணை விவரங்களை தனிப்படை போலீசார் ரகசியமாக வைத்துள்ளனர்.

Related Stories:

More