ஏ.கே.ராஜன் ஆய்வுக்குழு விவகாரம் எங்கள் கருத்தை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்க கூடாது: உச்ச நீதிமன்றத்தில் திமுக கேவியட் மனு

புதுடெல்லி: நீட் தேர்வை ஆய்வு செய்யும் ஓய்வு நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கிய விவகாரத்தில், உச்ச நீதிமன்றத்தில் திமுக.வின் சார்பிலும் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மருத்துவ சேர்க்கைகளில் நீட் ஏற்படுத்திய தாக்கத்தை ஆய்வு செய்ய, உயர் நீதிமன்ற ஓய்வு நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் 9 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு நியமனம் செய்தது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக பாஜ பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் வழக்கு தொடர்ந்தார். இந்த குழுவை அமைத்ததற்கான தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்யும்படி மனுவில் அவர் கோரினார்.

இதை விசாரித்த உயர் நீதிமன்றத்தின் தலைமை அமர்வு, ‘நீட் தேர்வால் ஏற்படும் பாதிப்பை பொதுமக்கள் கருத்தை கேட்டு அறிய, தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது. அதை தடுக்க முடியாது. எனவே, ஏ.கே.ராஜன் குழுவுக்கு தடை விதிக்க முடியாது,’ எனக் கூறி, மனுவை கடந்த ஜூலை 13ம் தேதி தள்ளுபடி செய்தது. இந்நிலையில், இந்த வழக்கில் திமுக தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக மாணவர்கள், 3ம் நபர்கள் யாரேனும் மேல்முறையீடு செய்தால், எங்கள் தரப்பு வாதங்களை கேட்காமல் எந்த உத்தரவையும் உச்ச நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டாம்,’ என கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே, இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.

Related Stories: