×

கொரோனா எங்கிருந்து வந்தது?....கண்டுபிடிக்க முடியவில்லை: அமெரிக்க உளவுத்துறை அறிக்கை

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி கடந்த ஆண்டு முதல் இன்று வரை ஆளுமை செலுத்தி வருகிறது. இதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளை அரசு அறிவித்து நடைமுறைப்படுத்தியது. பின்னர் ஒருவழியாக ஓராண்டுக்கு பிறகு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு அனைத்து நாடுகளிலும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. 2 டோஸ் தடுப்பூசி போட்ட பிறகும் கொரோனா பாதிப்பு குறையாமல் தொடர்கிறது. உருமாற்ற கொரோனா வைரஸ் பல பரிணாமங்களில் உருவாகி அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில், கொரோனா வைரஸ் எங்கிருந்து பரவியது. யாரிடமிருந்து பரவியது. இந்த உயிர்கொல்லி வைரஸ் இயற்கையா, செயற்கையா போன்ற ஆய்வில் அமெரிக்க உளவுத்துறை ஈடுபட்டிருந்தது.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பல்வேறு ஆய்வுகள், விசாரணைகள் மேற்கொண்ட உளவுத்துறை அமைப்பு இறுதியில், கொரோனா வைரசின் மூலத்தை கண்டறிவதில் வெற்றி பெறவில்லை. எங்கிருந்து கொரோனா வைரஸ் பரவியது என்பது கண்டறிய முடியாத ஒன்று என்று அந்த அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் ‘ கொரோனா வைரஸ் விலங்குகளிடமிருந்து மனிதனுக்கு பரவியதா அல்லது ஆய்வுக்கூடத்தில் இருந்து கசிந்ததா என்ற புலனாய்விலும் ஒரு தெளிவான முடிவுக்கு அவர்களால் வர இயலவில்லை’. இது குறித்து அமெரிக்க தேசிய உளவுத்துறை இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சார்ஸ், கோவிட் வைரஸ் தொற்று இயற்கையாக உருவானதா, ஆய்்வுக்கூடத்தில் இருந்து கசிந்ததா என்ற இரண்டுக்கும் நம்பத்தகுந்த ஆதாரங்கள் உள்ளன. ஆனால் ஆய்வாளர்கள் இதை உறுதிப்படுத்தவில்லை. இது ஒரு உயிரி போருக்கான ஆயுதம் என்றும் வுகான் வைராலஜி ஆய்வு கூடத்தில் இருந்து பரவியது என்பதற்கு நேரடி ஆதாரமோ, தகவல்களோ இல்லை’.

கொரோனா வைரஸால் உலகளாவிய நாடுகள் பாதிப்படைந்ததற்கு சீனா தான் காரணம் என்று குற்றம்சாட்டி அரசியல் செய்வதை விட, குடிமக்களை காப்பாற்ற அரசு உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை என்பதே பொருத்தமானது என்று கூறப்பட்டுள்ளது.  இந்த அறிக்கைக்கு பதிலடி கொடுத்துள்ள அமெரிக்காவுக்கான சீன தூதரக செய்தி தொடர்பாளர் லி பெங்யு, ‘கொரோனாவின் மூலத்தை கண்டுபிடிப்பதில் விஞ்ஞானிகளை விட உளவுத்துறையை தான் அமெரிக்கா அதிகமாக நம்புகிறது. அறிவியல்பூர்வமான பூர்வாங்க விளக்கங்களை அமெரிக்க குறைத்து மதிப்பிடுவது அரசியல் கேலிக்கூத்து. இது வைரஸின் மூலத்தை கண்டறியும் உலகளாவிய முயற்சிக்கு தடையாக அமையும்.’

முன்னாள் அதிபர் டிரம்ப் ஆதரவாளர்கள் பலர், இது சீன வைரஸ் என்று கருத்து பரப்பியதால், அமெரிக்க பொருளாதாரம் பின்னடைவை சந்தித்து டிரம்ப் தேர்தலில் தோல்வியடைந்தார். அமெரிக்க உளவு நிறுவனங்கள் சில ‘கொரோனா இயற்கையான வைரஸ் என்று உறுதியாக விளக்கம் அளித்துள்ளன. மேலும், இது விலங்களுக்கும் சமீபத்தில் அதிகமாக பரவியது குறிப்பிடத்தக்கது’ என்றார். ‘தொற்றால் பாதிக்கப்பட்ட விலங்கு மற்றும் அது தொடர்பான வைரஸ் மூலமாக இது பரவியிருக்கலாம்’ என்ற கருத்தில் அமெரிக்க உளவு அமைப்புகளுக்கு நம்பிக்கையில்லை. வுகான் வைராலஜி ஆய்வுக்கூடத்தில் இறந்த விலங்குகளின் பரிசோதனையில் ஈடுபட்டிருந்த போது இந்த வைரஸ் உருவாகியிருக்கலாம் என்று ஒரு உளவு அமைப்பு நம்புகிறது’.

ஆனால், இவை எதற்கும் ஆதாரங்கள் கண்டுபிடிப்பதில் உலக விஞ்ஞான சமூகம் பின்னடைவை தான் சந்தித்துள்ளது. அதே நேரம் கொரோனா எங்கிருந்து உருவானது எப்படி பரவியது என்ற விசாரணைக்கு சீனா ஒத்துழைக்க மறுக்கிறது என்ற சர்வதேச குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இதை சீன தூதரகம் நிராகரித்துள்ளது. இந்த விவகாரத்தை அரசியல் ஆக்காமல் விஞ்ஞானபூர்வமாக ஆய்வு மேற்கொண்டு முயற்சி செய்தால், சீனா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று அந்நாடு குறிப்பிட்டுள்ளது.

மாநிலங்களுக்கு 111 கோடி டோஸ்கள்
ஒன்றிய சுகாதார அமைச்சகம் கூறுகையில், ‘மாநிலங்களுக்கு இதுவரையில் 111.13 கோடி டோஸ் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. மாநிலங்களிடம் 12.72 கோடி டோஸ்கள் கையிருப்பில் உள்ளன,’ என கூறப்பட்டுள்ளது.
* இந்தியாவில் நேற்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் புதிதாக 14,313 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,42,60,470 ஆக உயர்ந்துள்ளது.
* புதிதாக 549 பேர் உயிர் இழந்துள்ளனர்.

அசாம், மே.வங்கத்தில் பாதிப்பு அதிகரிப்பு
அசாம், மேற்கு வங்க மாநில அரசு தலைமை செயலாளருக்கு ஒன்றிய அரசு சுகாதாரத் துறை கூடுதல் செயலாளர் ஆர்த்தி அகுஜா அனுப்பியுள்ள கடிதத்தில், ‘கொரோனா வைரஸ் அசாம் மற்றும் மேற்கு வங்கத்தில் கடந்த ஒரு வாரமாக அதிகரித்து வரும் நிலையில் பரிசோதனைகள் குறைக்கப்பட்டுள்ளது. இது குறித்து சீராய்வு செய்து உரிய விதிமுறைகளை இருமாநிலங்களும் கடைப்பிடிக்க வேண்டும்.  ஆர்டிபிசிஆர் பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும்’. என்று கூறியுள்ளார்.


Tags : US , Corona, US, intelligence, report
× RELATED அமெரிக்க டாலர்களை மாற்றித்தருவதாக ரூ.15 லட்சம் மோசடி..!!